Published : 01 Dec 2022 02:22 PM
Last Updated : 01 Dec 2022 02:22 PM

டான் பிராட்மேன் டெஸ்ட் சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித்!

பெர்த்: பெர்த்தில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் ஆஸ்திரேலியா- மே.இ.தீவுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான வியாழக்கிழமை ஆஸ்திரேலியா உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 402 ரன்கள் குவித்திருந்தது. லபுஷேன் 204 ரன்கள் எடுத்து உணவு இடைவேளைக்கு முன் ஆட்டமிழந்தார்.

ஸ்டீவ் ஸ்மித் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். ஆஸ்திரேலிய லெஜண்ட் டான் பிராட்மேன் எடுத்த 29 டெஸ்ட் சதங்கள் என்ற சாதனையை தன் 29-வது டெஸ்ட் சதத்தின் மூலம் ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.

முதல் நாளான புதன்கிழமை டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ். பிட்சில் பவுன்ஸ் இருக்கிறது, ஆனால் வேகம் இல்லை. டேவிட் வார்னர் 5 ரன்களை மட்டுமே எடுத்து மே.இ.தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்டன் சீல்ஸ் பந்தை ஆஃப் திசையில் விளாச முயன்று மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனார். 9/1 என்ற நிலையிலிருந்து உஸ்மான் கவாஜாவும் மார்னஸ் லபுஷேனும் ஒரு சதக் கூட்டணி அமைத்தனர். கவாஜா 5 பவுண்டரி 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்து கைல் மேயர்ஸ் பந்தில் அவுட் ஆகிச் சென்றார். ஆஸ்திரேலியா 151/2 என்று இருந்தது.

அதன் பிறகு ஸ்டீவ் ஸ்மித் இறங்கினார். விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் பந்து வீச்சு என்பதையே மறந்தது போல் வீசிய மே.இ.தீவுகள் கஷ்டப்பட்டது. விக்கெட்டே விழுமா என்ற சந்தேகமே எழுந்தது. ஸ்மித்தும், லபுஷேனும் தங்கள் இஷ்டத்துக்கு ஆடினர். கேப்டன் கிரெக் பிராத்வெய்ட் என்ன செய்வதென்று தெரியாமல் திரு திருவென்று முழித்துக் கொண்டிருந்தார்.

ஸ்டீவ் ஸ்மித்தும், லபுஷேனும் சேர்ந்து 251 ரன்களைச் சேர்த்தனர். லபுஷேன் 350 பந்துகளில் 20 பவுண்டரிகல் 1 சிக்சருடன் 204 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இப்போது இடது கை அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் இறங்கியுள்ளார். ஸ்டீவ் ஸ்மித் நேற்று 59 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தவர் இப்போது பிராட்மேன் சாதனையைச் சமன் செய்யும் சதத்தை எடுத்து 119 ரன்களுடன் ஆடி வருகிறார்.

வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களில் ஜேசன் ஹோல்டர் மட்டுமே 21 ஓவர் 6 மெய்டன் 48 ரன்கள் என்று விக்கெட் எடுக்காவிட்டாலும் டைட்டாக வீசிவருகிறார் மற்ற பவுலர்கள் செஞ்சுரி அடிக்கும் நிலையில் தான் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்திருந்தால் விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருக்கலாம். ஆனால் பவுலிங்கை மறந்தது போல் வீசுகின்றனர்.

இன்னொரு விஷயம் லபுஷேன் மட்டும் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஆஸ்திரேலியா மொத்தமாக ஆயிரம் ரன்களைக் கூட எடுத்திருக்க முடியும் என்ற நிலையே இருந்தது. இப்போது மட்டுமென்னா ஆயிரம் வரை செல்லலாம் என்று நினைத்தால் செல்லலாம், அந்த லட்சணத்தில்தான் மே.இ.தீவுகளின் பவுலிங் உள்ளது.

ஐசிசி என்ற ஒன்று கிரிக்கெட்டை வளர்க்க இருக்கிறதா அல்லது அழிக்க இருக்கிறதா என்ற சந்தேகமே மேலோங்கி நிற்கிறது. மே.இ.தீவுகள் இப்போது சிறுகச் சிறுக அழிந்து வருகிறது. இனி ஆஸ்திரேலியா போன்ற அணிகள் அவர்களை அழைக்க மாட்டார்கள்.

இப்போதுதான் ஆஸ்திரேலியா 424/3 என்ற ஸ்கோரை எட்டியுள்ளது. இன்னும் ஸ்மித் இரட்டைச் சதம் பாக்கியுள்ளதோ, ட்ராவிஸ் ஹெட் சதம் பாக்கியுள்ளதோ, இன்னும் கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி வேறு உள்ளனர். நிச்சயம் 1000 ரன்கள் எடுக்கும் அளவுக்கு ஆஸ்திரேலியா போகாது என்றே சொல்ல முடியும்.

இருந்தாலும் யார் கண்டார்கள் மே.இ.தீவுகள் கேப்டன் மட்டுமல்ல ஒட்டுமொத்த அணியே ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்வதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x