டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருதை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. படம்: பிடிஐ
தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு தயான்சந்த் கேல் ரத்னா விருதை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. படம்: பிடிஐ
Updated on
1 min read

புதுடெல்லி: தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று வழங்கினார்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் தயான் சந்த் கேல்ரத்னா, அர்ஜுனா விருதும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும், வாழ்நாள் சாதனையாளருக்கு விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இதில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதே போல் தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனில் வாலறிவன், மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் வீராங்கனை ஜெர்லின் அனிகா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த விழா நடைபெற்றது. விழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி பாராட்டினார்.

விழாவில் மொத்தம் 25 பேருக்கு அர்ஜுனா விருது, 4 பேருக்கு துரோணாச்சார்யா விருது, 4 பேருக்கு மேஜர் தயான்சந்த் விருது வழங்கப்பட்டது. இதில் கேல் ரத்னா விருது ரூ.25 லட்சம் ரொக்கம், பதக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவை அடங்கியது. அர்ஜுனா விருது ரூ.15 லட்சம் ரொக்கம், வெண்கலச் சிலை, பாராட்டுப் பத்திரம் ஆகியவை அடங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in