

நடப்பு ரஞ்சி சீசன் கிரிக்கெட் போட்டிகளின் போது ‘பலமுறை’ நடத்தை விதிமுறைகளை மீறியதாக சஞ்சு சாம்சன் மீது புகார் எழ, கேரளா கிரிக்கெட் சங்கம் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் 4 நபர் விசாரணைக்குழு இந்தப் புகார்களை விசாரிக்கும் என்று கேரள கிரிக்கெட் சங்க செயலர் டி.என்.அனந்த நாராயண், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.
மும்பையில் கோவா அணிக்கு எதிரான போட்டியில் ‘டக்’ அவுட் ஆன கோபத்தில் மட்டையை உடைத்துள்ளார் சஞ்சு சாம்சன்.
மேலும் ஓய்வறையிலிருந்து நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமல் வெளியேறியுள்ளார், மேலும் தங்கும் விடுதியிலும் அவர் இல்லை, பல மணி நேரங்களுக்கு சஞ்சு சாம்சனை தொடர்பு கொள்ள முடியவில்லை.
கட்டாக்கில் திரிபுரா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு நிர்வாகம் ஓய்வு அளிக்க முடிவெடுத்தது. அணியில் இல்லை என்றவுடன் சஞ்சு சாம்சன், பெங்களூர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்குச் சென்று முழங்கால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அனுமதி கோரியிருந்தார், ஆனால் அணியுடன் இருக்குமாறு சஞ்சுவுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கேரளா-திரிபுரா போட்டியின் முதல் நாளன்று வெள்ளைச் சீருடையில் சஞ்சு மைதானத்திற்கு வராததால் நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது.
மேலும் அணியுடன் செல்ல மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்ததாகவும் சஞ்சு மீது புகார் எழுந்துள்ளது.
“நாங்கள் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்பதற்காக கண்டிப்பு காட்டவில்லை, ஆனால் அவரது நடத்தை மோசமானதிலிருந்து மிகமோசமான நிலைக்குச் சென்று விட்டது” என்று செயலர் அனந்த நாராயணன் தெரிவித்தார்.
சஞ்சு சாம்சனின் தந்தையார் சாம்சன் விஸ்வநாத் தன் மகன் தவறிழைக்கவில்லை, இரு முழங்கால்களிலும் காயம் ஏற்பட்டதினால் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. மட்டையை அவர் உடைக்கவில்லை, வெறுப்பில் ‘கிட் பேகை’தூக்கி எறிந்தார் அவ்வளவே. மேலும் பல முறை கோரிக்கைகள் வைத்தும் சஞ்சுவின் முழங்கால் பிரச்சினைகளை கேரள கிரிக்கெட் சங்கம் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டையும் தந்தை முன்வைத்தார்.