Published : 10 Jul 2014 12:10 PM
Last Updated : 10 Jul 2014 12:10 PM

கோல் கீப்பர் ரொமேரோ அபாரம்: இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனா

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டீனா வெற்றி பெற்றது. நெதர்லாந்து வெளியேறியது.

அர்ஜென்டீனா கோல்கீப்பர் ரொமேரோ, நெதர்லாந்து ஸ்ட்ரைக்கர்களான விலார் மற்றும் ஸ்னைடர் ஆகியோர் அடித்த பெனால்டி ஷாட்களை கச்சிதமாகக் கணித்து பந்தை கோலாகாமல் தடுத்தார். மாறாக அர்ஜென்டீனா வீரர்கள் அடித்த 4 ஷாட்களும் கோலாக மாறின. நெதர்லாந்து கோல்கீப்பர் ஜாஸ்பர் சிலீசன் ஒன்றைக்கூட தடுக்க முடியவில்லை.

அன்று கோஸ்டா ரிகா அணிக்கு எதிராக டிம் குரூல் என்ற சப்-கோல்கீப்பரை பெனால்டிக்காக கொண்டு வந்தது நெதர்லாந்து. ஆனால் இந்த ஆட்டத்தில் நெதர்லாந்து பயிற்சியாளர் 3 சப் வீரர்களையும் பயன்படுத்திவிட்டதால் டிம் குரூலை களமிறக்க முடியாமல் போனது.

லயோனல் மெஸ்ஸி தலைமையில் முதல் இறுதிப் போட்டியைக் காண்கிறது அர்ஜென்டீனா. மேலும் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

120 நிமிட நேர ஆட்டம். இரு அணிகளின் இறுக்கமான தடுப்பரண்களால் கோல்களை அனுமதிக்கவில்லை. பெனால்டி ஷூட் அவுட்டிற்கு ஆட்டம் சென்றது. மெஸ்ஸி, இசகியல் காரே, செர்ஜியோ அகியுரோ மற்றும் மாக்ஸி ரோட்ரிகஸ் ஆகியோர் கோல்களை அடித்தனர். நெதர்லாந்து கோல்கீப்பர் சிலீசன் 16 முறை பெனால்டி ஷாட்களை கோட்டைவிட்டவர் இப்போது இந்த எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.

1990ஆம் ஆண்டு ஜெர்மனி அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் அர்ஜெண்டீனா தோல்வி தழுவியது. அப்போது கேப்டன் மரடோனா. 24 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் பழிதீர்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால் அன்று பிரேசிலுக்கு நடந்தது அர்ஜென் டீனாவுக்கு நடக்காமல் இருந்தால் சரி.

மெஸ்ஸியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது நெதர்லாந்து. குறிப்பாக அதன் ரான் விலார், மெஸ்ஸி இருமுறை சீறிப்பாய்ந்தபோது அடக்கினார். மேலும் அவருக்கு சுதந்திர வெளியை அனுமதிக்கவில்லை.

அதேபோல் நெதர்லாந்து ஸ்ட்ரைக்கர் அர்ஜென் ராபின் 90 நிமிடங்களுக்குப் பிறகு முதன்முறையாக சுதந்திரம் பெற்று பந்தை எடுத்துச் சென்று ஷூட் செய்யும் முன்னர் அர்ஜென்டீனா வீரர் மஸ்செரானோ அபாரமாகத் தடுத்தார்.

இப்படியேதான் முதல் 90 நிமிட நேர ஆட்டமும் சென்றது. அர்ஜென் டீனா, நெதர்லாந்து இரு அணிகளுமே ஒருவரையொருவர் கோல் அடிக்க விட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்.

இதனால் ஆட்டம் சில தருணங்களில் அரையிறுதிக்கான விறுவிறுப்பை இழந்தது. கூடுதல் நேரத்தில் சில மூவ்களை இரு அணிகளும் செய்தாலும் அதனால் இரு அணிகளுக்குமே நன்மை கிட்டவில்லை.

பிரேசில் 1- 7 என்று தோல்வியடைந்த பிறகே இந்த இரு அணிகளும் எச்சரிக்கையின் உச்சக்கட்டத்தில் ஆடியதால் ஆட்டம் பெனால்டி ஷூட் அவுட்டிற்குச் சென்றது. நெதர்லாந்து இன்னும் கொஞ்சம் காரியவாத நோக்கத்துடன் ஆடி அர்ஜென்டீனாவுக்கு நெருக்கடி அளித்திருக்கலாம். ஆனால் அந்த அணி ஏனோ பெரிய அளவில் நெருக்கடி கொடுக்கவில்லை.

அந்த அணியின் போராட்டக்குணம், ஆக்ரோஷம் இந்த ஆட்டத்தில் இல்லை. இதுவே அதன் வெளியேற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x