Published : 29 Nov 2022 10:28 AM
Last Updated : 29 Nov 2022 10:28 AM

FIFA WC 2022 அலசல் | போர்ச்சுகலின் 2வது கோல் மோசடியா? - ‘ஹேண்ட் பால்’ இல்லாததற்கு பெனால்டி: எழும் சர்ச்சை

போர்ச்சுகல் வீரர்கள்

கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரிவு ‘ஜி’ போட்டியில் ஆடிய போர்ச்சுகல், உருகுவே அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் போர்ச்சுகல் 2-0 என வெற்றி பெற்றாலும் அந்த அணி பதிவு செய்த 2-வது கோல் உருகுவேவுக்கு எதிராக செய்யப்பட்ட மோசடி என்றே கால்பந்து அரங்கில் பேசப்பட்டு வருகிறது. உருகுவே வீரர் ஹேண்ட் பால் செய்து விட்டார் என்று போர்ச்சுகலுக்கு பெனால்டி கொடுக்கப்பட்டது.

போர்ச்சுகல் அணியில் புருனோ பெர்னாண்டஸ், 54-வது நிமிடத்திலும், பிறகு 93-வது நிமிடத்திலும் கோல்களை பதிவு செய்தார். ஒன்று அற்புதமான பீல்ட் கோல் என்றால் இரண்டாவது பெனால்டி கிக். காரணம் 89-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் புருனோ பெர்னாண்டஸ் பந்தை உள்ளே கொண்டு செல்ல முயன்றார். அப்போது அவரை சேலஞ்ச் செய்ய உருகுவே வீரர் யோஸ் மரியா ஜிமேனேஸ், சறுக்கியபடியே வந்து தடுக்க முயன்றதில் பின்பக்கமாக விழுந்தார் பந்து அவர் கையில்பட்டது.

இதையடுத்து பெர்னாண்டஸ் இது ஹேண்ட் பால் என்று முறையிட்டார். ஆனால் ஈரான் நடுவர் அலிரேஸா ஃபகானி முறையீட்டை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு போர்ச்சுகலுக்கு சார்பாக ஒரு கார்னர் கிடைத்தது, அப்போது கத்தார் நடுவர் அப்துல்லா அல் மர்ரி, ரிவியூ செய்ய பரிந்துரைத்தார். ஈரான் நடுவர் விஷயம் தெரிந்தவராக இருக்க கத்தார் நடுவர் போர்ச்சுகலுக்கு ஆதரவாக வீடியோ ரெஃபரல் கேட்டதாக சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது.

ஆனால் ஃபிஃபா விதிமுறைகளில் ஹேண்ட் பால் கொடுப்பது பற்றி விளக்கங்கள் உள்ளன. 2021-ல் இந்த விளக்கங்கள் திருத்தப்பட்டுள்ளன. இதில் உடலுக்கு வெளியே கை நீண்டிருந்தாலும் ஹேண்ட் பால் கொடுக்க வேண்டிய அவசியமில்லை, காரணம் ஒரு வீரர் வேண்டுமென்றே கையை நீட்டியோ, கையை சூட்சமாக, சாமர்த்தியமாகப் பயன்படுத்தியோ எதிரணியினரின் கோலை தடுத்தால் மட்டுமே ஹேண்ட் பால் ஆகும். மாறாக ஒரு வீரர் எதிரணியினரின் கோல் முயற்சியைத் தடுக்கும் முயற்சியில் கீழே விழும்போது பந்து கையில் பட்டால் அது வேண்டுமென்றே ஒருவர் பந்தை கையால் தடுப்பதோ, தொடுவதோ ஆகாது என்று விதிமுறைகளில் உள்ளது.

நேற்றைய போட்டியில் உருகுவே வீரர் யோஸ் மரியா ஜிமேனேஸ் கீழே விழுந்தார் அப்போதுதான் தெரியாமல் பந்து அவர் கையில் பட்டது இது ஹேண்ட் பால் அல்ல. ஜிமேனேஸ் கீழே விழும்போது தன் இடது கையை ஆதரவுக்காக கொண்டு வந்தாரே தவிர பந்தை தடுக்க அல்ல. எனவே இது விதிவிலக்கான ஒரு தருணமே. விதிமுறைகளுக்கு அளிக்கப்பட்ட விளக்கத்துக்கு இந்த சந்தர்ப்பம் பொருத்தமானதே. ஆகவே ஹேண்ட் பால் கொடுக்கப்பட்டது தவறு என்றே நிபுணர்கள் கருதுகின்றனர்.

தன் கையை இயல்பை மீறி பந்தைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தினால்தான் அது தண்டனைக்குரிய தவறாகுமே தவிர ஜிமேனேஸ் செய்தது போல் கீழே விழும்போது பேலன்ஸுக்காகக் கையைக் கொண்டு வரும்போது பந்தின் தொடர்பு ஏற்பட்டால் அது ஹேண்ட் பால் கிடையாது என்பதே புதிய விளக்கமாகும். அதற்குப் பெனால்டி கொடுத்தது தவறு. இதனால் என்ன உருகுவே வெற்றி பெற்றிருக்குமா என்று கேட்க முடியாது. இன்னும் 3 நிமிடங்கள் மீதமிருந்த ஆட்டத்தில் ஒரு கோலை உருகுவே அடித்து ட்ரா செய்யும் வாய்ப்பு இல்லை என்று எப்படி கூற முடியும்? எது எப்படியிருந்தாலும் ஹேண்ட் பால் கொடுத்தது அதுவும் ஈரான் நடுவர் விஷயம் தெரிந்து மறுக்க கத்தார் நடுவர் ரெஃபரல் செய்தது சந்தேகத்தைக் கிளப்புவதாகவே உள்ளது.

மற்றபடி போர்ச்சுகல் அடுத்தச் சுற்றுக்கு நுழையத் தகுதியான அணிதான், அதுவும் கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற ஒரு போர் வீரன் இருக்கும் அணி குறைந்தது அரையிறுதி வரை ஆடுவதுதான் அவருக்கு செய்யும் நியாயம் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x