Last Updated : 14 Dec, 2016 03:42 PM

 

Published : 14 Dec 2016 03:42 PM
Last Updated : 14 Dec 2016 03:42 PM

டெஸ்ட் தரவரிசையில் கோலி 2-வது இடம்; பந்துவீச்சில் அஸ்வின் முதலிடம் தக்கவைப்பு

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் கோலி 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். பவுலிங் மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசைகளில் அஸ்வின் முதலிடம் தக்கவைத்துள்ளார்.

இந்த ஆண்டில் 3 இரட்டைச் சதங்களை விளாசிய விராட் கோலி தற்போது முதலிடம் வகிக்கும் ஸ்டீவ் ஸ்மித்தைக் காட்டிலும் 11 புள்ளிகளே பின் தங்கியுள்ளார், இந்தப் போட்டியில் ஸ்மித்தை கோலி சாய்த்தால் இதிலும் டி20-யிலும் முதலிடம் என்ற பெருமையைப் பெறுவார். ஒருநாள் போட்டிகளிலும் 2-ம் இடத்தில் உள்ளார் கோலி, எனவே விரைவில் 3 வடிவங்களிலும் நம்பர் 1 பேட்ஸ்மன் என்ற சாதனையை கோலியிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

அணிகள் தரவரிசையில் இந்தியா தன் டெஸ்ட் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. மாறாக இங்கிலாந்து சென்னை டெஸ்ட் போட்டியில் தோற்றால் தங்கள் 2-ம் இடத்தை இழந்து சரிவடையும் அச்சுறுத்தல் உள்ளது.

வியானன்று (நாளை) பிரிஸ்பனில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் தொடரை தொடங்கவுள்ள நிலையில் இருஅணிகளும் முறையே தங்களது 3 மற்றும் 4-ம் இடத்தில் உள்ளன. இதனால் இங்கிலாந்து 5-ம் இடத்திற்குச் செல்லவே வாய்ப்புள்ளது. அதாவது சென்னை டெஸ்டில் தோற்றால்!

டெஸ்ட் பவுலிங் தரவரிசையில் முத்தையா முரளிதரனுக்கு (920 புள்ளிகள்) அடுத்த படியாக 904 என்ற அதிகபட்ச புள்ளிகளைப் பெற்றுள்ளார் அஸ்வின். ஆனால் ஷேன் வார்னைக் கடக்க இன்னும் 2 புள்ளிகள் தேவை.

நடப்பு டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் 239 ரன்களை எடுத்த அஸ்வின், ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் முதலிடம் வகிக்கிறார் (483 புள்ளிகள்). 2வது இடததில் உள்ள வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசனைக் காட்டிலும் 78 புள்ளிகள் முன்னிலை பெற்றுள்ளார். ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 4-ம் இடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் தொடக்க வீரர் முரளி விஜய் 5 இடங்கள் முன்னேறி 24-ம் இடத்தில் உள்ளார், புதிய ஆல்ரவுண்டர் ஜெயந்த் யாதவ் 87-வது இடத்திலிருந்து 56-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை டாப் 5 வீரர்கள்:

டெஸ்ட் பேட்டிங்: ஸ்டீவ் ஸ்மித், விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஹஷின் ஆம்லா.

டெஸ்ட் பவுலிங்: அஸ்வின், ஹெராத், ஸ்டெய்ன், ஆண்டர்சன், ஹேசில்வுட்.

டெஸ்ட் ஆல்ரவுண்டர்: அஸ்வின், ஷாகிப் உல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், ஜடேஜா, மொயின் அலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x