

புது டெல்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா. தற்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1979 முதல் 1998 வரையில் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக தடகள விளையாட்டில் பி.டி.உஷா பங்கேற்று வந்தார். ஆசிய விளையாட்டில் 4 தங்கம் மற்றும் 7 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளார். “நான் ஒருபோதும் ஒலிம்பியனாக விரும்பவில்லை. களத்தில் நான் படைத்த எனது சொந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நான் யாரையும் வெல்ல வேண்டும் என போட்டியிட்டதில்லை” என்பது அவரது சக்சஸ் ஃபார்முலா.
கடந்த சனிக்கிழமை அன்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவர் சொல்லி இருந்தார். சக விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் ஆதரவுடன் மனு தாக்கல் செய்வதாக சொல்லி இருந்தார்.
58 வயதான பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 16-வது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பை அலங்கரிக்க உள்ள முதல் பெண்மணியும் அவர்தான். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அவரை பலரும் வாழ்த்திய வண்ணம் உள்ளனர். மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் வாழ்த்தியுள்ளார்.
எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் பி.டி.உஷா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது. விளையாட்டு பிரிவில் இந்தப் புதிய பொறுப்பின் மூலம் மீண்டும் ஒருமுறை இந்திய தேசத்திற்கு பெருமை தேடி தர உள்ளார் அவர்.