Published : 27 Nov 2022 07:42 AM
Last Updated : 27 Nov 2022 07:42 AM
தோகா: உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் டி பிரிவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கோல் கணக்கில் துனீசியாவை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து உலகக் கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு துனீசியாவுக்கு மங்கியுள்ளது.
22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் அல் ஜனூப் மைதானத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற குரூப் டி பிரிவு லீக் ஆட்டத்தில் நேற்று ஆஸ்திரேலியா, துனீசியா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணிவீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினர். முதல் பாதியின்23-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர் மிட்செல் டியூக், அற்புதமான கோலை அடித்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். இதன்மூலம் 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலைக்குச் சென்றது.
முதல்பாதி வரை 1-0 என்ற நிலையே நீடித்தது. 2-வது பாதியின்போது, ஆஸ்திரேலியாவின் தடுப்பாட்டத்தை உடைத்து கோலடிக்க துனீசியா வீரர்கள் முயன்றனர். ஆனால் அவர்களது முயற்சிக்கு ஆஸ்திரேலிய கோல் கீப்பர் மேத்யூ ரயான் முட்டுக்கட்டை போட்டார். இறுதிவரை இந்த நிலை நீடிக்கவே 1-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
குரூப் டி பிரிவில் பிரான்ஸ் 3 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், டென்மார்க் ஒரு புள்ளியுடன் 3-வது இடத்திலும், துனீசியா ஒரு புள்ளியுடன் கடைசி இடத்திலும் உள்ளன.
முதல் போட்டியில் டிரா, 2-வது போட்டியில் தோல்வி என்ற மோசமான நிலையில் துனீசியா உள்ளது. இதனால் அந்த அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மிகவும் மங்கியுள்ளது.
போலந்திடம் சவுதி அரேபியா தோல்வி: குருப் சி பிரிவில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் போலந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அணியை வென்றது. போலந்து அணி சார்பில் பயட்டர் ஜிலின்ஸ்கி, ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT