Published : 26 Nov 2022 04:28 PM
Last Updated : 26 Nov 2022 04:28 PM

FIFA WC 2022 அலசல் | அமெரிக்காவுடன் 0-0 டிரா... பழைய ஃபார்முக்குத் திரும்பிய இங்கிலாந்து தோல்வியின்றி ‘எஸ்கேப்’!

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை அமெரிக்க அணியுடன் மோதிய இங்கிலாந்து அணி 0-0 என்று, ஒரு கோல் கூட போட முடியாமல் டிரா செய்திருப்பது இங்கிலாந்து ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கடும் அதிருப்திக்கும், விமர்சனத்திற்கும் தூண்டியுள்ளது. ஈரானுக்கு எதிராக 6 கோல்கள் அடித்து வென்று விட்டு, அமெரிக்காவுக்கு எதிராக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனதன் மூலம் இங்கிலாந்து, எங்கு தன் ‘பழைய’ கோல் இல்லா “ஃபார்முக்கு” வந்து விட்டதோ என்ற ஐயத்தை எழுப்பியுள்ளது.

அதாவது, அமெரிக்க வீரர்கள், இங்கிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தினார்கள் என்பதே உண்மை. ஆனால், இவர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. அது அந்த அணியின் அனுபவமின்மை, பெரிய போட்டிகளில் ஆடிய பயிற்சியின்மையின் விளைவு என்று ஒரு காரணத்தைக் கூற முடியும். அப்படியென்றால் ஆண்டு முழுதும் நாள்தோறும் எங்காவது லீக்குகளில் கால்பந்துடனேயே புழங்கி வரும் இங்கிலாந்து வீரர்கள் ஒரு கோல் அடிக்க முடியாததையும், அமெரிக்க கோல் கீப்பர் கைக்கே ஷாட்களை அடித்ததையும், புரிந்து கொள்ள ஒரே வழி ‘இங்கிலாந்து மீண்டும் தன் ஃபார்முக்கு வந்து விட்டது’ என்ற கேலிப் பார்வையைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

நேற்றைய ட்ராவினால் வேல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து 0-3 என்ற கோல் கணக்கில் தோற்றால் வெளியேற வேண்டியதுதான். இந்தப் போட்டிக்கு முன்னால் இங்கிலாந்து மேலாளர் சவுத்கேட் எழுப்பிய சந்தேகத்தில் “நாம் (இங்கிலாந்து) பெரிய கால்பந்து தொடர்களில் எதிலாவது அமெரிக்காவை வீழ்த்தியிருக்கிறோமா? இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். ஒரு தேசமாக நாம் எப்போதும் நம்மை உயர்த்தி உயர்த்தியே பேசி வருகிறோம். ஆனால் இதற்கான அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை” என்று மிகவும் நயமான விமர்சனத்துடன் கறார் பார்வையை முன்வைத்தார். இதை சவுத்கேட் இந்தப் போட்டிக்கு முன்பாக ‘பெரிய எதிர்பார்ப்பு வேண்டாம்’ என்ற எச்சரிக்கைக்காக தெரிவித்திருக்கலாம்.

ஆனால் அவர் எதற்குக் கூறினாரோ, அது போலவே இங்கிலாந்து தன்னை உயர்த்தி உயர்த்திப் பேசிக்கொள்வதற்கு இந்த ஆட்டத்தில் நியாயம் செய்யவில்லை என்பதே நேற்றைய ஆட்டத்தின் கண்கூடு. ஒருவிதத்தில் கோல் இல்லா டிரா என்பது மறைமுக ஆசீர்வாதமே. ஈரானுக்கு எதிராக 6-2 என்று வென்றிருந்தாலும், அன்று வேல்ஸ் அணியை ஈரான் இரண்டு அற்புதமான கோல்களினால் வீழ்த்தியதைப் பார்த்த போது, இங்கிலாந்து ஒருவேளை இன்னொரு முறை ஈரானுடன் ஆடினால் தோற்கவே செய்யும் என்ற சிந்தனையைத் தவிர்க்க முடியாது என்றே தோன்றுகிறது.

நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தின் புகாயோ சாக்கா பந்தைக் கொண்டு செல்ல, ஷாட் ஆட இடம் கிடைக்காமல் திணறினார். ஹாரி கேன் கோல் ஷாட்டை கோல் கீப்பர் கைக்கு அடிக்கிறார். பெரிய திறமை கொண்ட வீரர் என்று கருதப்படும் ஃபில் ஃபோடன் பெஞ்சை அலங்கரித்ததும் விமர்சனங்களை ஈர்த்துள்ளது.

பதிலி வீரர்களை விரைவு கதியில் மாற்றாமல் 68ஆவது நிமிடம் வரை இழுத்தடித்தது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது. அதற்குள் அமெரிக்க வீரர்களின் தாக்குதல் உச்சம் பெற்று வரிசையாக கார்னர்களை வென்று இங்கிலாந்துக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது. ஹாரி மெக்வைர்தான் அத்தனை அமெரிக்க கார்னர் ஷாட்களையும் கிளியர் செய்தார். 8 முறையாவது அவர் கிளியர் செய்திருப்பார். மாறாக அமெரிக்க பகுதிக்கு இங்கிலாந்து தாக்குதலை எடுத்துச் செல்லும் போதெல்லாம் அமெரிக்க தடுப்பு அரண் இங்கிலாந்தின் ஷாட் முயற்சிகளை வெகு எளிதாக முறியடித்தது.

அமெரிக்காதான் கோல் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு அமெரிக்க ஆட்டத்தில் தெரிந்தது. முதலில் நடுக்கள வீரர் வெஸ்டன் மெக்கெனி பாக்சில் 18 அடியிலிருந்து இங்கிலாந்தின் கோல் நோக்கி அடித்த ஷாட் வெளியே சென்றது. மற்றொரு முயற்சியில் அமெரிக்க வீரர் பியுலிசிக் இங்கிலாந்து தடுப்பு வீரர் லூக் ஷாவுக்கு போக்குக் காட்டி அடித்த கோல் நோக்கிய ஷாட் கோல் போஸ்ட்டின் மேல் கம்பியில் பட்டு தெறித்தது. கோலாக மாறவில்லை. கடைசி வரை இங்கிலாந்து ஆட்டத்தில் ஒரு தாக்கமே இல்லை.

மாற்றங்கள் கொண்டு வந்தாலும் ஈரானுக்கு எதிராக ஆடிய இங்கிலாந்து போல் இல்லை. காரணம் அமெரிக்க வீரர்கள் ஹோம்வொர்க் செய்திருப்பது தெரிந்தது. இங்கிலாந்து வீரர்களுக்கு போதிய இடம் கொடுக்காமல் நெருக்கடி கொடுத்துக் கொண்டே இருந்தனர். கோலை நோக்கிய இங்கிலாந்தின் ஷாட்களில் எந்த ஒரு வேகமும், தாக்கமும் இல்லவே இல்லை. பாஸ்களில் ஒரு உத்வேகம் இல்லை. எனவே தான் இப்படிக் கூற வேண்டியுள்ளது: “இங்கிலாந்து மீண்டும் தன் பழைய பார்முக்குத் திரும்பி விட்டது” என்று.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x