Published : 26 Nov 2022 06:33 AM
Last Updated : 26 Nov 2022 06:33 AM

FIFA WC 2022 | உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் கோல் கீப்பருக்கு 3-வது முறை ரெட் கார்டு

அல் ரய்யான்: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘பி’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஈரான். உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ஈரான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

அல் ரய்யானில் உள்ள அகமதுபின் அலி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் இருந்தே வேல்ஸுக்கு அழுத்தம் கொடுத்தது ஈரான் அணி. முதல் பாதியில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்த போதிலும் அவை முழுமை பெறாமல் போனது. 86-வது நிமிடத்தில் வேல்ஸ் அணியின் கோல்கீப்பர் வெய்ன் ஹென்னெஸ்ஸி தனது இடத்தில் இருந்து முன்னேறி வந்து பாக்ஸ் பகுதிக்கு வெளியே துள்ளியவாறு பந்தை தடுத்தார். அப்போது ஈரான் அணியின் ஸ்டிரைக்கர் மெஹ்தி தரேமியுடன் பலமாக மோதினார்.

இதைத்தொடர்ந்து ரெஃப்ரி வெய்ன் ஹென்னெஸ்ஸிக்கு ரெட்கார்டு வழங்கினார். இதனால் வெய்ன் ஹென்னெஸ்ஸி மைதானத்தில் இருந்து வெளியேற வேல்ஸ் அணி 10 வீரர்களுடன் விளையாடியது. கோல்கீப்பராக டேனி வார்டு செயல்பட்டார். நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 8-வது நிமிடத்தில் வேல்ஸ் வீரர் ஜோ ஆலன் பந்தை விலக்கி விடுவதற்கு பதிலாக ஈரான் அணியின்ரூஸ்பே செஷ்மியிடம் தட்டிவிட்டார். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரூஸ்பே செஷ்மி கோல் அடித்து அசத்தினார். அடுத்த 3-வது நிமிடத்தில் ரமின் ரெஸாயின் அடுத்த கோலை அடிக்க ஈரான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த அணிக்கு எதிராக ஈரான் வெற்றி பெறுவது இதுவே முதன் முறை.

கத்தாருக்கு 2-வது தோல்வி: குரூப் ஏ பிரிவில் அல் துமானா மைதானத்தில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் செனகல் அணி3-1 என்ற கோல் கணக்கில் போட்டியை நடத்தும் கத்தார் அணியைவென்றது. செனகல் அணி சார்பில்பவுலயா டியா, ஃபமாரா டைட்ஹியோ, பம்பா டயங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். கத்தார் வீரர் முகமது முன்தாரி ஒரே ஒரு கோல் அடித்தார். இறுதியில் செனகல் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தத் தொடரில் கத்தார் பெறும் 2-வது தோல்வியாகும் இது. நெதர்லாந்து, ஈக்வேடார் அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆட்டத்தில் ஈக்வேடாரை நெதர்லாந்து வீழ்த்தினாலோ அல்லது ஆட்டம் டிராவில் முடிவடைந்தாலோ கத்தார் அணி போட்டியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.

3-வது முறை ரெட் கார்டு: ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வேல்ஸ் கோல்கீப்பர் வெய்ன் ஹென்னெஸ்ஸிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் கோல் கீப்பருக்கு ரெட் கார்டு வழங்கப்படுவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் இதுமெலங் குனே, 1994-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இத்தாலியின் ஜியான்லூகா பக்லியுகா ஆகியோரும் ரெட் கார்டு பெற்றிருந்தனர்.

இந்தத் தொடரில் முதல் ரெட் கார்டு பெற்ற வீரரான வேல்ஸ் அணியின் கோல் கீப்பர் ஹெனெஸ்ஸி ஆட்டத்திலிருந்து 86-வது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டார். அப்போது, கூடுதல் நேரத்தை பயன்படுத்தி 90+8 மற்றும் 90+11-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தனர் ஈரான் வீரர்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x