

தோஹா: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் வேல்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது ஈரான் அணி. இந்தத் தொடரில் முதல் ரெட் கார்டு பெற்ற வீரரான வேல்ஸ் அணியின் கோல் கீப்பர் ஹெனெஸ்ஸி ஆட்டத்திலிருந்து 86-வது நிமிடத்தில் வெளியேற்றப்பட்டார். அப்போது, கூடுதல் நேரத்தை பயன்படுத்தி 90+8 மற்றும் 90+11-வது நிமிடத்தில் கோல் பதிவு செய்தனர் ஈரான் வீரர்கள்.
அகமது பின் அலி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் குரூப் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள வேல்ஸ் மற்றும் ஈரான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. நடப்பு உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியில் ஈரான், இங்கிலாந்து வசம் தோல்வியை தழுவியது. வேல்ஸ் அணி, அமெரிக்காவுக்கு எதிரான போட்டியை 1-1 என சமன் செய்தது. அதனால் இரு அணிகளுக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியமானதாக இருந்தது.
இரு அணிகளும் கோல் அடிக்க தங்கள் முயற்சிகளை ஆட்டம் முழுவதும் மேற்கொண்டன. 86-வது நிமிடத்தில் களத்தில் அபாயகரமான செயலை மேற்கொண்டு எதிரணி வீரரை தடுக்க முயன்ற வேல்ஸ் கோல் கீப்பர் ஹெனெஸ்ஸி, ரெட் கார்டு பெற்று வெளியேறினார். அதையடுத்து கூடுதல் நேரத்தில் செஷ்மி மற்றும் ரமின் ரெசையன் அடுத்தடுத்து கோல் போட்டு ஈரானை வெற்றி பெற செய்தனர்.
இந்தத் தோல்வியை நம்ப முடியாமல் அப்படியே மைதானத்தில் வீழ்ந்தனர் வேல்ஸ் வீரர்கள். முன்னதாக, இந்தப் போட்டி தொடங்கியபோது ஈரான் வீரர்கள் தங்கள் நாட்டின் தேசிய கீதத்தை பாடி இருந்தனர். இதற்கு முந்தையப் போட்டியில் அவர்கள் தேசிய கீதம் பாட மறுத்திருந்தனர். தங்கள் நாட்டில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய கீதத்தை அவர்கள் பாட மறுத்தது குறிப்பிடத்தக்கது.