

தோகா: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. நேற்று நள்ளிரவு மேற்கு தோகாவின் அல் ரய்யானில் உள்ள அகமது பின்அலி மைதானத்தில் குரூப் ‘எஃப்’-ல் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் – கனடா அணிகள் மோதின. பெல்ஜியம் அணியில் காயம் காரணமாக நட்சத்திர வீரரான ரோமலு லுகாகு களமிறங்கவில்லை. 36 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பையில் கனடா அணி களமிறங்கியதால் அந்த நாட்டு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
கனடா அணியும் தொடக்கத்தில் சிறப்பாகவே செயல்பட்டது. 7-வது நிமிடத்தில் ஜோனாதன் டேவிட்டின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் இல்லாமல் போனது. 11-வது நிமிடத்தில் தஜோன் புக்கனன் அடித்த பந்தை பெல்ஜியம் வீரர் யானிக் கராஸ்கோ கையால் தடுத்தார். இதனால் கனடா அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால் இதை அந்த அணி சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறியது. பெனால்டி வாய்ப்பில் அல்போன்சா டேவிஸ் உதைத்த பந்தை பெல்ஜியம் கோல்கீப்பர் திபாட் கோர்டோயிஸ் அற்புதமாக தடுத்தார். இதனால் பெல்ஜியம்அணி கோல் வாங்குவதில் இருந்து தப்பித்தது. தொடர்ந்து கனடா தாக்குதல் ஆட்டம் தொடுக்க பெல்ஜியத்தின் டிபன்ஸுக்கு அழுத்தம் ஏற்பட்டது. கோல் கம்பத்துக்கு முன்பு திபாட் கோர்டோயிஸ் வலுவாக செயல்பட்டு கனடாவின் கோல் அடிக்கும் முயற்சிகளுக்கு பலமுறை முட்டுக்கட்டை போட்டார்.
44-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் டோபி ஆல்டர்வீர்ல்ட் தொலைவில் இருந்து அடித்த பந்தை பெற்ற முன்கள வீரர் மிச்சி பாட்சுவாய், கனடா அணியின் இரு டிபன்டர்களை கடந்து கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் இரு தரப்புக்கும் கோல் வாய்ப்புகள் கிடைத்தாலும், இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. கனடா இலக்கை நோக்கி பலமுறை பந்தை கொண்டு சென்று கடும் அச்சுறுத்தல் கொடுத்த போதிலும் அதை கோல்களாக மாற்ற முடியாமல் போனது. முடிவில் பெல்ஜியம் 1-0 என்றகோல் கணக்கில் வெற்றி பெற்றது.
36 வருடங்களுக்குப் பிறகு..: கனடா அணி 1986-ம் ஆண்டு முதன்முறையாக மெக்சிகோ உலகக் கோப்பையில் அறிமுகமானது. அந்தத் தொடரில் லீக் சுற்றின் 3 ஆட்டங்களிலும் கனடா தோல்வி அடைந்திருந்தது. இந்த 3 ஆட்டத்திலும் கனடா அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது. 36 வருடங்களுக்குப் பிறகு தற்போது கத்தார் உலகக் கோப்பையில் களமிறங்கிய நிலையில் கோல் அடிக்க கிடைத்த எளிதான வாய்ப்பை அல்போன்சா டேவிஸ் தவறவிட்டுள்ளார்.
தடுப்பு சுவர்…: உலக கால்பந்து அரங்கில் சிறந்த கோல்கீப்பராக அறியப்படும் பெல்ஜியத்தின் திபாட் கோர்டோயிஸ் தான் சந்தித்த கடைசி 10 ஸ்பாட்-கிக்கில் 6 முறை எதிரணியின் கோல் அடிக்கும் வாய்ப்பை தகர்த்துள்ளார். கனடாவுக்கு எதிராக பெல்ஜியம் பெற்ற வெற்றியில் திபாட் கோர்டோயிஸின் பங்கு அளப்பரியது.