

தோகா: 22-வது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நள்ளிரவு மைதானம் 974ல் நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல், கானா அணிகள் மோதின.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் வறட்சியாக செல்ல 65-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்து இந்த உலகக் கோப்பையில் அணிக்கான முதல் கோலை பதிவு செய்தார். இன்று கோல் அடித்ததன்மூலம் 5 உலகக் கோப்பை தொடரில் கோல் பதிவு செய்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார் ரொனால்டோ.
தொடர்ந்து ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் கானா அணியின் கேப்டன் ஆண்ட்ரூ ஆயு ஒரு கோல் அடித்து போர்ச்சுகல்லுக்கு பதிலடி கொடுத்தார். என்றாலும் சுதாரித்துக்கொண்ட போர்ச்சுக்கல் அணியில், ஜோ பெலிக்ஸ் 78-வது நிமிடத்திலும், 80-வது நிமிடத்தில் ரபேல் லியோவும் தலா ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினர்.
இறுதிக்கட்டத்தில் கானா அணியின் ஓஸ்மான் புகாரி 89-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தாலும், தோல்வியை தழுவியது. ஆட்டநேர முடிவில் போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் கானா அணியை வீழ்த்தி குரூப் எச் பிரிவில் முதலிடம் பிடித்தது.