

அல்-வக்ரா: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில், தான் பிறந்த நாடான கேமரூனுக்கு எதிராக கோல் பதிவு செய்த சுவிட்சர்லாந்து வீரர் அதனைக் கொண்டாட மறுத்தார். அவரது இந்த செயல் பலரது நெஞ்சங்களைக் கவர்ந்துள்ளது.
குரூப் ‘ஜி’ பிரிவில் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் கேமரூன் அணிகள் விளையாடின. இதில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. அந்த கோலை அந்த நாட்டுக்காக விளையாடிய ப்ரீல் எம்போலோ, ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பதிவு செய்திருந்தார். ஆனாலும், உலகக் கோப்பை அரங்கில் பதிவு செய்த அந்த கோலை கொண்டாடவில்லை. அதன் பிறகு வழக்கம் போலவே களத்தில் விளையாடும் பணியை கவனித்தார்.
25 வயதான எம்போலோ, கேமரூன் நாட்டில் பிறந்தவர். ஆனாலும், அவர் சுவிட்சர்லாந்து நாட்டுக்காக சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடி வருகிறார். அவரது இளம் வயதில் அவரின் குடும்பம் கேமரூன் நாட்டில் இருந்து பிரான்ஸ் வந்துள்ளது. பின்னர் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளனர். லீக் 1 தொடரிலும் அவர் விளையாடி வருகிறார். முன்கள வீரர்.
சுவிட்சர்லாந்து நாட்டுக்காக சீனியர் போட்டிகளில் சர்வதேச அளவில் 12 கோல்களை பதிவு செய்துள்ளார். கேமரூன் அணிக்கு எதிராக இன்றையப் போட்டியில் அவர் கோல் பதிவு செய்ததும் அமைதியாக அப்படியே கடந்து சென்றார். இருகரம் கூப்பி அப்படியே அமைதியாக அந்தத் தருணத்தை கடந்தார். தன் கைகளை முகத்திலும் வைத்துக் கொண்டார் அவர். உலகக் கோப்பை வரலாற்றில் தாய்நாட்டுக்கு எதிராக வேறு ஒரு நாட்டுக்காக விளையாடி கோல் பதிவு செய்த முதல் வீரரும் அவர்தான்.