

விளையாட்டு துறை ஒதுக்கீட்டின் கீழ் இந்திய ஹாக்கி அணியின் வீரர்கள் 6 பேர் உட்பட 9 பேரை காவல் துறையில் டிஎஸ்பி ஆக, பஞ்சாப் மாநில அரசு நியமித்துள்ளது.
2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற மன்பிரீத் சிங், ஆகாஷ்தீப் சிங், சர்வன்ஜித் சிங், ராமன்தீப் சிங், குர்விந்தர் சிங், தரம்வீர் சிங் ஆகியோர் டிஎஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சண்டிகாரில், மாநில துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் தலைமையில் நடைபெற்றது.
இவர்களில் மன்பிரீத் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் இந்த ஆண்டில் லண்டனில் நடைபெற்ற சாம்பியன் டிராபி ஹாக்கி தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய அணியிலும், ரியோ ஒலிம்பிக் போட்டியிலும், ஆசிய சாம்பியன் டிராபியை வென்ற இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் மன்பிரீத் சிங் பேசும் போது, “டிஎஸ்பி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. எங்களது திறமையை அங்கீகரித்த பஞ்சாப் அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.
ஹாக்கி வீரர்களை தவிர 3 முறை ஆசிய மற்றும் காமன் வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனை மன்தீப் கவுர், ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை குஷ்பீர் கவுர் மற்றும் ஆசிய விளையாட்டில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றிய அமன்தீப் கவுர் ஆகியோருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.