

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டம் மீண்டும் மழையால் பாதிக்கப்பட ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 465 ரன்கள் எடுத்துள்ளது.
ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்க வாய்ப்பில்லாமல் போன போது ஸ்மித் 100 ரன்களுடனும், ஸ்டார்க் ஒரு 103 மீ சிக்சருடன் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
வஹாப் ரியாஸ் தனது நோ-பால் பிரச்சினையிலிருந்து விடுபடவில்லை. 27 ஓவர்களில் அவர் 12 நோ-பால்களை வீசியுள்ளார். இதனால் வார்னர் விக்கெட்டையும் அவர் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
278/2 என்று ஆஸ்திரேலியா வலுவான நிலையில் தொடங்கிய போது உஸ்மான் கவாஜா தனது 95 ரன்களுடன் மேலும் 2 ரன்களை மட்டுமே சேர்த்து இன்று காலை வஹாப் ரியாஸ் பந்தில் எட்ஜ் செய்து விக்கெட் கீப்பர் சர்பராசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 97 என்பது ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஒரு அச்சுறுத்தல் எண்ணாகி வருகிறது, வார்னர் ஒரு முறை 97 ரன்களில் ஆட்டமிழக்க, கவாஜா இருமுறை இதே ஸ்கோரில் ஆட்டமிழந்துள்ளார்.
கவாஜா ஆட்டமிழந்தவுடன் ஹேண்ட்ஸ்கோம்ப் ஸ்மித்துடன் இணைய இருவரும் சேர்ந்து 141 பந்துகளில் 92 ரன்களைச் சேர்த்தனர். இதில் ஹேண்ட்ஸ்கோம்ப் மட்டும் 8 பவுண்டரிகள் உதவியுடன் 54 ரன்கள் எடுத்து சொஹைல் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணியில் கொண்டு வரப்பட்ட 3 இளம் வீரர்களில் ரென்ஷா, ஹேண்ட்ஸ்கோம்ப் தேற, மேடிசன் சோபிக்கவில்லை, இன்று அவர் 22 ரன்கள் எடுத்து யாசிர் ஷா பந்தை மேலேறி வந்து ஆட முயன்றார், பந்து அவரை ஏமாற்றி ஸ்டம்பைத்தாக்கியது.
இவர் இதுவரை 0,1,4, 22 என்று தனது டெஸ்ட் இடத்தை இழக்கும் வாய்ப்பை தானே உருவாக்கிக் கொண்டுள்ளார், அதே போல் மேத்யூ வேட் 9 ரன்கள் எடுத்து சொஹைல் கான் வீசிய ஆடாமல் விட வேண்டிய பந்தை கட் செய்ய முயன்றார் பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஆசாத் ஷபிக் கையில் ஸ்லிப்பில் அமர்ந்தது. இவரும் 4,7,1, தற்போது 9 என்று சோபிக்கவில்லை.
இவர் ஆடும்போதுதான் ஷார்ட் லெக்கில் நின்று கொண்டிருந்த இரட்டைச்சத சாதனை நாயகன் அசார் அலி அடி வாங்கி பெவிலியன் அழைத்துச் செல்லப்பட்டார். வேட் ஆடிய சக்தி வாய்ந்த புல் ஷாட் அசார் அலியின் ஹெல்மெட்டை பயங்கரமாகத் தாக்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் சோதனைக்காகவும் உடனடியாக அசார் அலி பெவிலியன் அழைத்துச் செல்லப்பட்டார்.
கேப்டன் ஸ்மித் அபாரமாக ஆடி தனது 17-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார். சொஹைல் கான் பந்தை கட் செய்து 3 ரன்கள் ஓடி துரதிர்ஷ்ட 97 ரன்களிலிருந்து சதம் கண்டார் ஸ்மித். 168 பந்துகளைச் சந்தித்த ஸ்மித் இதுவரை 9 பவுண்டரிகளை அடித்துள்ளார்.
மிட்செல் ஸ்டார்க், யாசிர் ஷா பந்தை மைதானத்தின் நீண்ட தொலைவில் உள்ள பகுதியில் சிக்சருக்கு விரட்டினார். 103மீ சிக்சராகும் இது. நாளை முழு ஆட்டம் சாத்தியமானால் பாகிஸ்தானை விரைவில் ஆல் அவுட் ஆக்க ஆஸ்திரேலியா முயற்சி செய்யும். நிச்சயம் ஸ்மித் டிக்ளேர் செய்து விடுவார் என்று நம்ப இடமுண்டு.