

கடந்த 2021 ஜூனில் நடைபெற்ற யூரோ கோப்பைத் தொடரில் டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் களத்தில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அசைவற்று கிடந்த அவரை முதலுதவி சிகிச்சைக்காக ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர் மருத்துவ உதவியாளர்கள். நடப்பு உலகக் கோப்பை தொடரில் அவர் மீண்டும் களம் கண்டுள்ளார்.
சுமார் 528 நாட்களுக்கு பிறகு அவர் பங்கேற்று விளையாடும் போட்டி என்பதால் அவருக்கு இன்றையப் போட்டி மிக முக்கிய போட்டியாக அமைந்தது. குரூப் ‘டி’ பிரிவில் துனீசியா அணிக்கு எதிராக அவர் விளையாடினார். இந்தப் போட்டியில் டென்மார்க் மற்றும் துனிசீயா என இரண்டு அணிகளும் கோல் பதிவு செய்ய தவறின. அதன் காரணமாக ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
கடந்த ஆண்டு பின்லாந்து அணிக்கு எதிரான யூரோ கோப்பை தொடரின் லீக் போட்டியில் அவர் பந்தை பாஸ் செய்ய முயன்றபோது மயங்கி விழுந்தார். அவர் மாரடைப்பு காரணமாக நிலை குலைந்து விழுந்ததாக சொல்லப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வந்த அவர் களம் திரும்பியது கவனிக்கத்தக்கது.
துனீசியாவுக்கு எதிரான போட்டியில் டென்மார்க் அணிக்கு கிடைத்த கார்னர் வாய்ப்புகளை எரிக்சன் தான் எடுத்திருந்தார். டென்மார்க் நாட்டின் இன்ஸ்பிரேஷன்களில் எரிக்சன் ஒருவர் என அந்த அணியின் கேப்டன் சைமன் தெரிவித்துள்ளார்.