

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் நாம் இழந்தது என்ன என்பது ஞாயிற்றுக்கிழமை சூர்யகுமார் யாதவ், கோலி இறங்கும் 3-ம் நிலையில் இறங்கி ஆடியபோதுதான் புரிந்தது. இதுதான் ஆட்டம், இதைத்தான் உலகக் கோப்பை டி20-யில் நாம் இழந்தோம் என்பது புரிந்தது. மேலும் சூர்யகுமார் யாதவ் ரக பேட்டிங் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் தேவைப்படும் ஒன்று.
இது குறித்து சூர்யகுமார் யாதவ், ‘ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ’ சுருக்கப் பேட்டியில் கூறும்போது, “வருவேன், நேரம் வந்து விட்டது. முதல் தரக் கிரிக்கெட்டில், சிவப்புப் பந்தில் கணிசமாகப் பங்களிப்பு செய்த அனுபவம் உள்ளது. எனவே வருவேன்... வந்து விடுவேன்” என்று சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் பேச்சில் வீரம் காட்டினர். பம்மியதுதான் 2021 டி20-யில் வெளியேறியதற்குக் காரணம். 2022-ல் புதுயுகம் பிறந்தது. ‘பழையன கழியும்’ என்ற ரீதியில் முழக்கங்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார் கேப்டன் ரோஹித் சர்மா. கடைசியில் அவரே அடிக்க முடியாமல் திணறியதைத்தான் பார்க்க முடிந்தது. ரோஹித் சர்மா திணறியது ஆச்சரியமில்லை; ஏனெனில் இங்கு ஐபிஎல் தொடரிலேயே, மோசின் கான் உள்ளிட்ட இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் அவரை பதம் பார்த்ததை நாம் பார்த்திருக்கிறோம்.
ஆச்சா போச்சா என்று பேசிவிட்டு, கடைசியில் ‘சோண முத்தா போச்சா’ என்ற வடிவேலு நகைச்சுவை போல் உலகக்கோப்பை போயே போச்சு. இப்போது, ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் ஆடுவதைப் பார்க்க மகிழ்ச்சியாகவே உள்ளது. டி20 கிரிக்கெட் இவர்களுக்கானது. டி20 கிரிக்கெட்டின் வணிக வளமும், விரைவு கதியில் உலகம் முழுதும் பிரபலமடையும். அதன் தன்மையும், மூத்த வீரர்களை அவ்வளவு சுலபமாக அதிலிருந்து விடுபடமுடியாமல் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
நாம் கேன் வில்லியம்சன் ஆட்டத்தைப் பார்த்து வருகிறோம். அவர் உண்மையில், டி20-யிலிருந்து ஓய்வு பெற இதுதான் நேரம். ரோஹித் சர்மாவும் டி20 கிரிக்கெட்டை விட வேண்டிய வயது வந்துவிட்டது. விராட் கோலி டி20 உலகக்கோப்பையில் கலக்கினாலும், நேற்று அவர் இறங்கும் 3-ம் நிலையில், சூர்யகுமார் யாதவ் இறங்கினால், எந்த ஸ்கோரை எட்டுகிறோம் என்பதைக் கண்கூடாகப் பார்த்தோம். விராட் கோலி, அதே டவுனில் இறங்கி முதல் 20 ரன்களை 24-25 பந்துகளில்தான் அடிக்கிறார். அதன் பிறகு அவர் கடைசி வரை நின்றால், ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்துகிறார். ஆனால், அவர் கடைசியில் 40 பந்தில் 50, 50 பந்தில் 60 என்றுதான் அடிக்கிறார். ஆனால் சூர்யகுமார் அதே டவுனில் 51 பந்துகளில் 11 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 111 ரன்களை விளாசினார். அதுவும் கடைசி கட்டத்தில் 3 ஓவர்களில் 17, 18, 22 என்று விளாசித்தள்ளினார்.
ஹர்திக் பாண்டியாவின் மிகப்பெரிய ஈகோ என்னவெனில் கடைசி ஓவரில் 2 ரன்களை இருமுறை ஓடியதுதான். அவரது தவறினால்தான் சவுதி ஹாட்ரிக் சாதனை புரிந்தார். கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் ஸ்ட்ரைக்கிற்கே வரவில்லை. இப்படியா ஒரு கேப்டன் சிந்திப்பது? ஏற்கெனவே இவர் தினேஷ் கார்த்திக்கிற்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் ஆடியதையும் பார்த்தோம். சக வீரர் புகழ்பெறுவது ஹர்திக் பாண்டியாவுக்கு ஏதோ உறுத்தலாக உள்ளது என்ற ரீதியில் நெட்டிசன்கள் பேசத்தொடங்கியுள்ளனர். ஆகவே சூர்யகுமார் 50 பந்துகள் நின்றால் 100 ரன்களுக்கும் மேல் விளாசுவார். மற்றவர்கள் 60 ரன்களையே எடுக்க முடியும். இதுதான் சூர்யகுமாரை முன்னால் இறக்குவதன் பலன்.
இதைத்தான் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் நாம் இழந்து விட்டோம். விராட் கோலியினால் தான் உலகக் கோப்பையில் நாம் சில போட்டிகளை வெல்ல முடிந்தது என்று கூறலாம். ஆனால், அது நடந்ததை வைத்து பேசும் விஷயம். ஆனால், சூர்யகுமாரை அவர் டவுனில் இறக்கியிருந்தால், ஒருவேளை கோலியும் ரோஹித்தும் தொடக்கத்தில் இறங்கி, சூர்யகுமார் யாதவ் 3-ம் நிலையில் இறங்கியிருந்தால் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஸ்கோரை நிச்சயம் 200 ரன்களுக்குக் கொண்டு சென்றிருக்கலாம் என்பதே நம் ஆதங்கம். ஏனெனில் இங்கிலாந்துக்கு எதிராக சூர்யகுமார் பெரிய இலக்கை விரட்டி அதிரடி சதம் கண்டவர்.
இது போன்ற சில பல ட்ரிக்குகளை நாம் உலகக் கோப்பையில் விட்டு விட்டோம் என்பதே இப்போது சூர்யகுமாரின் ஆட்டத்தைப் பார்க்கும் போது புரியவருகிறது. இதை முன்னுதாரணமாக வைத்து சூர்யகுமாரை விரைவில் டெஸ்ட் போட்டிகளிலும் முயற்சி செய்து பார்த்தால் உலக பவுலர்கள் நிச்சயம் நடுங்கவே செய்வார்கள். இவர் ஷாட் அடிக்கும் இடங்களில் பீல்டர்களை நிறுத்த முடியாது. அப்படிப்பட்ட இடங்களில் பிரமிப்பூட்டும் ஷாட்களை சூர்யகுமார் ஆடுவதால் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஜொலிப்பார் என்பதை பரிசீலிக்காமல் இருக்க முடியாது.