

அல் கோர்: கத்தார் நாட்டில் கோலாகலமாக தொடங்கி உள்ளது ஃபிஃபா உலகக் கோப்பை தொடர். இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. அந்த நாட்டில் உள்ள 8 மைதானங்களில் மொத்தம் 64 போட்டிகள் இன்று முதல் வரும் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது. வண்ணமயமான தொடக்க விழாவை தொடர்ந்து முதல் போட்டிக்கான விசில் ஊதப்பட்டது.
முதல் போட்டியில் தொடரை நடத்தும் கத்தார் அணி, ஈக்குவேடாரை எதிர்த்து விளையாடி வருகிறது. இந்த போட்டி அல் கோர் நகரில் அமைந்துள்ள அல் பைத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கத்தாரில் நடைபெறும் நடப்பு உலகக் கோப்பை தொடர் சிறந்த தொடராக இருக்கும் என ஃபிஃபா தலைவர் இன்ஃபான்டினோ தெரிவித்துள்ளார்.
இந்த தொடரில் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர், லுகாகு, எம்பாப்பே உட்பட சுமார் 831 வீரர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். இந்த தொடரில் காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கால்பந்து விளையாட்டு ஆர்வலர்கள், ரசிகர்கள் என லட்சக்கணக்கான பேர் கத்தார் நாட்டில் முகாமிட்டுள்ளனர்.
இந்த போட்டியில் தொடக்க முதலே ஈக்குவேடார் அணி பந்தை தங்கள் கால் வசம் வைத்துள்ளது. அந்த அணிக்காக முதல் கோலை வலென்சியா, ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வலைக்குள் தள்ளி கோல் ஆக்கினார். இரு அணிகளும் தொடர்ந்து இந்த போட்டியில் விளையாடி வருகின்றன.