Published : 08 Jul 2014 12:00 AM
Last Updated : 08 Jul 2014 12:00 AM

முதல் அரையிறுதியில் பிரேசில் – ஜெர்மனி பலப்பரீட்சை

உலகமே பெரும் ஆவலுடன் கண்டுகளித்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. அடுத்த உலக சாம்பியன் யார் என்ற கால்பந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பும் உச்சத்தை எட்டியுள்ளது.

மொத்தம் 32 அணிகள் பங்கேற்ற இந்த உலகக் கோப்பை போட்டியில் பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டீனா, நெதர்லாந்து ஆகிய பலம் வாய்ந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்த அணிகள் அனைத்துமே இதுவரை எந்த ஆட்டத்திலும் தோல்வியடையவில்லை.

புதன்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு பெலோ ஹாரிசோன்ட் நகரில் நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரேசில், ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் எதிர்பார்ப்பு உச்சத்தை அடைந்துள்ளது. உள்ளூரில் போட்டி நடைபெறுவதால் கோப்பையை வென்று தங்கள் நாட்டு ரசிகர்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் பிரேசில் உள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் திறமையும் வேகமும் அந்த அணிக்கு உண்டு என்பது முந்தைய போட்டிகளில் நிரூபணமாகியுள்ளது.

ஏனெனில் காலிறுதி ஆட்டத்தில் அதிகபட்சமாக 2 கோல்கள் அடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ள அணி பிரேசில் மட்டுமே. ஜெர்மனி, ஆர்ஜென்டீனா ஆகிய அணிகள் காலிறுதியில் ஒரு கோல் மட்டுமே அடித்து வெற்றி பெற்றன. நெதர்லாந்து பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இதற்கு முந்தைய மோதல்கள்

இப்போது பிரேசில், ஜெர்மனி ஆகிய இரு அணிகளும் சமபலம் வாய்ந்தவை என்றாலும் கால்பந்து வரலாறு பிரேசிலுக்கு சாதகமாகவே இருக்கிறது. இரு அணிகளும் இதற்கு முன்பு 21 முறை விளையாடியுள்ளன. இதில் பிரேசில் 12 ஆட்டங்களிலும், ஜெர்மனி 4 ஆட்டங்களிலும் வென்றுள்ளன. 5 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன. ஒட்டுமொத்தமாக பிரேசில் 39 கோல்களை அடித்துள்ளது. ஜெர்மனி 24 கோல்களை எடுத்துள்ளது.

உலகக் கோப்பையில்..

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரு அணிகளும் இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் மோதியுள்ளன. ஜப்பானில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் வென்று சாம்பியன் ஆனது. அந்த ஆட்டத்தில் ரொனால்டோ பிரேசிலுக்காக 2 கோல்களையும் அடித்தார்.

அதன் பிறகு இப்போதுதான் பிரேசிலும் ஜெர்மனியும் உலகக் கோப்பை போட்டியில் மோதுகின்றன. எனவே இந்த அரையிறுதி ஆட்டத்தில் அதற்கு பதிலடி கொடுக்க ஜெர்மனி வீரர்கள் முனைப்பு காட்டுவார்கள்.

பெடரேஷன் கோப்பையில்..

பெடரேஷன் கோப்பை கால்பந்து போட்டியிலும் பிரேசில் அணிதான் ஜெர்மனியை இருமுறை வென்றுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான நட்புரீதியிலான ஆட்டத்தில் 9 முறை பிரேசில் வென்றுள்ளது. 5 முறை ஜெர்மனி வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் கடைசியாக 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெர்மனியின் ஸ்டர்காட்டில் நடைபெற்ற போட்டியில் விளையாடின. இதில் ஜெர்மனி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

நீண்ட நாள் கனவு

இதற்கு முன்பு பிரேசில் அணி 5 முறை (1958, 1962, 1970, 1994, 2002-ம் ஆண்டு) உலகக் -கோப்பையை வென்றுள்ளது. ஜெர்மனி மூன்று முறை (1954, 1974, 1990-ம் ஆண்டு) உலக சாம்பியனாகியுள்ளது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அணி என்றாலும் உலகக் கோப்பையை வெல்வது என்பது 1990-க்குப் பின் ஜெர்மனி அணியின் நீண்ட நாள் கனவாக உள்ளது. மேலும் இப்போது 4-வதுமுறையாக ஜெர்மனி அரையிறுதிக்கு வந்துள்ளது.

இதற்கு முந்தைய இரு உலகக் கோப்பையிலும் (2006, 2010) ஜெர்மனியால் 3-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. அதற்குமுந்தைய உலகக் கோப்பையில் (2002) பிரேசிலிடம் உலகக் கோப்பையை நழுவ விட்டது. எனவே தங்கள் நாட்டின் கால்பந்து வரலாற்றில் இந்த அரையிறுதி போட்டி நடைபெறும் நாள் மிகவும் முக்கியமானது என்ற கவனத்துடன் ஜெர்மனி வீரர்கள் களமிறங்குவார்கள்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் அதிக கோல் அடித்த அணிகள் பட்டியலில் பிரேசிலும்,ஜெர்மனியும் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இரு அணிகளும் இதுவரை 10 கோல்கள் அடித்துள்ளன. நெதர்லாந்து, கொலம்பியா அணிகள் தலா 12 கோல் அடித்து முதலிடத்தில் உள்ளன.

ஜெர்மனியின் பலம்

முன்கள வீரர் தாமஸ் முல்லர், கேப்டன் பிலிப் லாம் ஆகியோர் ஜெர்மனி அணியின் மிகப்பெரிய பலமாக உள்ளனர். முல்லர் இதுவரை 4 கோல் அடித்து இந்த போட்டியில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளார். பிரேசில் அணியின் நெய்மரும் இதுவரை 4 கோல் அடித்துள்ளார். ஆனால் காயம் காரணமாக இனி வரும் போட்டிகளில் அவர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் சகவீரர்கள் கோல் அடிப்பதற்கு உதவியாக பந்தை கடத்தி தருவதில் சிறப்பாக செயல்பட்டு வருவது ஜெர்மனி கேப்டன் ஜெர்மனி பிலிப் லாம். இதுவரை 408 “பாஸ்களை” அவர் சகவீரர்களுக்கு அளித்துள்ளார். இதில் 86.6 சதவீதம் மிகத் துல்லியமானதாக அமைந்தது. காய்ச்சலில் இருந்து விடுபட்டு காலிறுதியில் களமிறங்கிய மேட்ஸ் ஹம்மல்ஸ் பிரான்ஸுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இக்கட்டான நேரத்தில் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்களை பெற்றுள்ளது ஜெர்மனியின் பலம்.

பிரேசிலின் சிக்கல்

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சொந்த மண்ணில் களமிறங்குவது பிரேசில் அணிக்கு மிகப்பெரிய பலம் என்றாலும், நட்சத்திர வீரர் நெய்மர், கேப்டன் தியாகோ சில்வா ஆகியோர் விளையாட முடியாத நிலை சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை பிரேசில் பெற்ற வெற்றிகளில் நெய்மர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். அவர் 4 கோல்களை அடித்துள்ளார்.

கேப்டன் தியாகோ சில்வா இருமுறை மஞ்சள் அட்டை பெற்றுள்ளதால் ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அவரை களமிறக்க வேண்டும் என்ற நோக்கில் ஃபிபாவிடம் பிரேசில் அணி முறையீடு செய்துள்ளது. ஆனால் அவரை களமிறக்க அனுமதி கிடைக்காது என்றே தெரிகிறது.

பிரேசில் அணியை சுட்டிக்காட்டி ஜெர்மனியின் நடுகள வீரர் பாஸ்டியன் ஸ்வைன்ஸ்டைகர் அளித்துள்ள பேட்டியிலும் பிரேசில் அணியின் பலவீனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

“பிரேசில் அணிக்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு சவாலானதுதான் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் 2002 உலகக் கோப்பை போட்டியில் பிரேசில் அணியில் அற்புதங்களை நிகழ்த்தும் வீரர்கள் (ரொனால்டோ, ரொனால்டினோ, ரிவால்டோ) இருந்தனர். ஆனால் இப்போது அதுபோன்ற வீரர்கள் இல்லை. சிறப்பாக விளையாடி வந்த நெய்மர் வெளியேறிவிட்டது, அவர்களுக்கு துரதிருஷ்டம்” என்று பாஸ்டியன் கூறியுள்ளார்.

எனினும் பிரேசில் அணி எளிதில் விட்டுக் கொடுத்துவிடக் கூடிய அணி அல்ல. ஹல்க், ஆஸ்கர், லூயிஸ், ஃபிரட் ஆகியோர் கடந்த ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியுள்ளனர். எதிர்பார்ப்புகளும் கணிப்புகளும் எப்படி இருந்தாலும், களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப சிறப்பாக ஆடும் அணிக்கே வெற்றி கிடைக்கும்.-ஏஎப்பி/ ராய்ட்டர்ஸ்

கோல் கீப்பர்கள்

ஒரு அணியின் வெற்றிக்கு கோல் அடிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் எதிரணியை கோல் எடுக்கவிடாமல் தடுப்பது. முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த உலகக் கோப்பையில் கோல் கீப்பர்களின் திறமை அபரிமிதமாக வெளிப்பட்டுள்ளது. பல ஆட்டங்களில் கோல் கீப்பர்களே அணியைக் கரை சேர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் ஜெர்மனி அணியின் கோல் கீப்பர் மானுவேல் நியார், பிரேசில் அணியின் ஜூலீயோ சீசர் ஆகியோர் அரையிறுதி ஆட்டத்தில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளனர். ஜெர்மனி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கோல் கீப்பர் மானுவேல். பலம் வாய்ந்த பிரான்ஸ் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் அந்த அணி வீரர்களின் அனைத்து கோல் முயற்சிகளையும் வெற்றிகரமாக முறியடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்த பெருமைக்குரியவர் மானுவேல்.

இதுவரை நடைபெற்ற 5 ஆட்டங்களில் மானுவேலை மீறி எதிரணியால் 3 கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது. எனவே பிரேசில் அணிக்கு எதிராகவும் அவர் இரும்பு அரணாக செயல்பட்டு அணியைக் காப்பாற்றுவார் என்பதில் சந்தேகமில்லை.

அதே நேரத்தில் பிரேசில் அணி அரையிறுதிவரை முன்னேற முக்கிய காரணமாக இருந்தவர் கோல் கீப்பர் ஜூலீயோ சீசர் என்றால் அது மிகையாகாது. முக்கியமாக சிலி அணிக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் இரு கோல்களை தடுத்து அணியை காலிறுதிக்கு அழைத்துச் சென்றவர் ஜூலியோ சீசர். 34-வயதாகும் சீசர், அணியின் சகவீரர்களும், பயிற்சியாளரும் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இதுவரை விளையாடி வந்துள்ளார். பிரேசிலின் பாதுகாப்பு அரணாக இருக்கும் அவரைத் தாண்டி இதுவரை 4 கோல்கள் மட்டுமே சென்றுள்ளன. இது தவிர சிலி அணி பெனால்டி ஷூட் அவுட்டில் சீசரை மீறி 2 கோல்களை அடித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x