Published : 19 Nov 2022 08:54 PM
Last Updated : 19 Nov 2022 08:54 PM

சிறுகச் சிறுக அழியும் மே.இ.தீவுகள் அணி: புரட்டி எடுத்த கத்துக்குட்டி வீரர்கள்!

ஆஸ்திரேலியாவுக்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் நிமித்தமாக சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி அங்கு 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ‘நியூ சவுத்வேல்ஸ் அன்ட் ஆக்ட் லெவன்’ என்ற அணிக்கு எதிராக ஆட்டத்தை ட்ரா செய்தது. அந்த அணியின் இரண்டு கத்துக்குட்டி வீரர்கள், மே.இ.தீவுகள் அணியின் பந்து வீச்சைப் புரட்டி எடுத்ததுதான், ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகில் பேச்சாக இருக்கிறது.

டிசம்பரில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது மே.இ.தீவுகள். முதல் டெஸ்ட் பெர்த்திலும், 2வது டெஸ்ட் அடிலெய்டிலும் நடைபெறுகிறது. கான்பெராவில் நடைபெற்ற 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி முதலில் பேட் செய்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 424 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய நியூசவுத்வேல்ஸ் மற்றும் ஆக்ட் லெவன் அணி மே.இ.தீவுகள் பந்து வீச்சை புரட்டி எடுத்து 97 ஓவர்களில் 426/4 என்று டிக்ளேர் (!) செய்தனர். 2வது இன்னிங்ஸில் மே.இ.தீவுகள் 114/4 என்று தடுமாற ஆட்டம் ட்ரா ஆனது.

இதில், மே.இ.தீவுகள் அணியின் பரிதாபம் என்னவெனில், நியூசவுத்வேல்ஸ் மற்றும் ஆக்ட் லெவன் அணியின் கேப்டன் பிளேக் மெக்டொனால்டு என்ற 24 வயது வீரர் 265 பந்துகளில் 177 ரன்களை 15 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் விளாசினார். மற்றொரு வீரரான ஆலிவர் டேவிஸுக்கு வயது 22 மட்டுமே, இவர் 106 பந்துகளில் 14 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 115 ரன்கள் எடுத்து விளாசித்தள்ள ஜஸ்டின் அவென்டனோ என்ற வீரர் 54 ரன்கள் எடுத்தார்.

இந்த 3 வீரர்கள் யாரெனில், இன்னும் முதல் தரக் கிரிக்கெட்டே ஆடாத கத்துக்குட்டி வீரர்கள் என்பதுதான், மே.இ.தீவுகள் பந்து வீச்சின் பலவீனத்தைக் குறிக்கும் பிரதான விஷயமாக ஆஸ்திரேலியாவில் பேசப்பட்டு வருகிறது. முதல் தர கிரிக்கெட்டே ஆடாத வீரர்களே கிமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ், அல்ஜாரி ஜோசப் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் ராஸ்டன் சேஸ் ஆகியோர் கொண்ட பந்து வீச்சைப் புரட்டி எடுக்கிறார்கள் என்றால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வார்னர், கவாஜா, ட்ராவிஸ் ஹெட், ஸ்மித், லபுஷேன் ஆகியோர் கொண்ட பேட்டிங் மே.இ.தீவுகளை என்ன செய்யும் என்ற பேச்சு ஆஸ்திரேலியாவில் எழுந்துள்ளது.

ஏற்கெனவே டி20 உலகக்கோப்பைக்குத் தகுதி பெறாமல் வெளியேறிய மே.இ.தீவுகள் அணியை அங்கு டெஸ்ட் தொடருக்காக அழைத்ததே கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாக ஆஸ்திரேலிய ஊடகங்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த கத்துக்குட்டி அணிக்கு எதிராக கிமார் ரோச் 34 ரன்கள் கொடுத்து 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டைக் கூட வீழ்த்த முடியவில்லை. தற்போதைய, மே.இ.தீவுகளின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராகிய ஜெய்டன் சீல்ஸ் 14 ஓவர்கள் வீசி, விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அல்ஜாரி ஜோசப் 13 ஓவர்களில், 54 ரன்கள் விளாசப்பட, ராஸ்டன் சேஸ் 23 ஓவர்களில் 117 ரன்கள் விளாசப்பட்டு ஒரேயொரு விக்கெட்டை மட்டும் கைப்பற்றியுள்ளார்.

மே.இ.தீவுகளின் முன்னணி பவுலர்கள் விக்கெட் எடுக்கவில்லை எனில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்படி விக்கெட்டை எடுக்க முடியும்? ஆஸ்திரேலிய பேட்டர்கள் இந்தத் தொடரில் சாதனைகள் பலவற்றை உடைத்தெறியப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படி இருந்த மே.இ.தீவுகளின் பந்து வீச்சு, இன்று இந்த நிலைமைக்கு தரம் தாழ்ந்துள்ளது என்பது உண்மையில் வருத்தத்தையும் வேதனையையுமே அதிகரிக்கிறது. கடைசியில் மே.இ.தீவுகளின் தற்போதைய டாப் பவுலர்களை, கத்துக்குட்டி பேட்டர்கள் கூட போட்டு சாத்தி எடுக்க முடிகிறது அல்லது இவர்களால் முதல் தரக் கிரிக்கெட் கூட ஆடாத வீரர்களைக் கூட வீழ்த்த முடியவில்லை. இந்த நிலை மே.இ.தீவுகளின் மிகப்பெரிய கலையான கிரிக்கெட் கலை தனது அந்திம காலத்திற்கு வந்து விட்டதை அறிவுறுத்துகிறது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போல்தான் மே.இ.தீவுகள் கிரிக்கெட்டும் பிரிட்டீஷ் காலனியாதிக்கத்தினால் உருவாகி பெரிய காலனீய எதிர்ப்புக் கலையாக, விளையாட்டாக வளர்த்தெடுக்கப்பட்டது. இன்று மே.இ.தீவுகளின் கிரிக்கெட் கலை சிறுகச் சிறுக, பணம் புழங்கும் கிரிக்கெட் உலகமும் கண்டு கொள்ளாத கீழ்நிலைக்குச் சென்று அழிகிறது என்பதை ஜீரணிக்கக் கடினமாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x