Published : 19 Nov 2022 06:41 AM
Last Updated : 19 Nov 2022 06:41 AM

FIFA WC 2022 | சுவாரஸ்யமான மோதல்களுக்கு தயாராகும் குரூப் - பி

இங்கிலாந்து

இங்கிலாந்து - தரவரிசை 5; பயிற்சியாளர் - கரேத்சவுத்கேட்: தலைமைப் பயிற்சியாளர் சவுத்கேட் மேற்பார்வையில் இங்கிலாந்து அணி கடந்த உலகக் கோப்பையில் அரை இறுதி ஆட்டம், யூரோ கோப்பை இறுதிச் சுற்றில் விளையாடியுள்ளது. அணியில் மிகச்சிறந்த வீரர்கள் சிலர் உள்ளனர், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் சர்வதேச அரங்கில் அனுபவம் இல்லாதவர்களாக உள்ளனர்.

பலம்: கேப்டன் ஹாரி கேன் தலைமையில் இளம் வீரர்கள் பில் ஃபோடன், ஜூட் பெல்லிங்ஹாம், புகாயோ சாகா, மசோன் மவுன்ட் ஆகியோர் களம் காண்கின்றனர். இந்த வீரர்கள் மிகச் சிறந்த தாக்குதல் ஆட்டத்துக்கு பெயர் பெற்றவர்கள்.

பலவீனம்: போதுமான பாதுகாப்பு அரண் இல்லாதது இங்கிலாந்து அணியின் பலவீனமாக உள்ளது. ஹாரி மகுயரின் மோசமான ஃபார்ம், கைல் வாக்கரின் காயம் ஆகியவை அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

அமெரிக்கா - தரவரிசை 16; பயிற்சியாளர் - கிரெக் பெர்ஹால்டர்: பல்வேறு விளையாட்டுகளில் கோலோச்சியபோதும், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் அமெரிக்காவால் சோபிக்க முடியவில்லை. 1930-ம் ஆண்டு உலகக் கோப்பையில் மூன்றாவது இடத்தைப் பிடித்த பிறகு, 2002 வரை அவர்களால் கால் இறுதிக்கு முந்தையச் சுற்று வரை முன்னேற முடியவில்லை.

பலம்: இங்கிலீஷ் ப்ரீமியர் லீக்கில் செல்சியா அணிக்காக விளையாடும் கிறிஸ்டியன் புலிசிக் மிகச்சிறந்த வீரர். மிட்ஃபீல்டர் வெஸ்டன் மெக்கென்னி, தற்காப்பு மிட்பீல்டர் டெய்லர் ஆடம்ஸ், முன்கள வீரர் ஜோஷ் சார்ஜென்ட், விங்கர் திமோதி வியாக் ஆகியோர் தூண்களாக உள்ளனர்.

பலவீனம்: பெரிய அளவிலான போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லாதது பாதிக்கும் அம்சமாக இருக்கும். ஐரோப்பிய லீக்குகளில் விளையாடும் புலிசிக் உட்பட அவர்களின் பெரும்பாலான நட்சத்திர வீரர்கள் அந்தந்த அணிகளின் விளையாடும் 11 வீரர்களில் ஒருவராக இல்லை.

வேல்ஸ் - தரவரிசை 19; பயிற்சியாளர் - ராப் பேஜ்: 64 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போதுதான் உலகக் கோப்பைத் தொடருக்கு வேல்ஸ் தகுதி பெற்றுள்ளது. கடைசியாக அந்த அணி 1958-ல் விளையாடி இருந்தது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தங்களது திறமையை அந்த அணியினர் நிரூபித்துள்ளனர். 2016 யூரோ கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.

பலம்: மிட்ஃபீல்டர் ஆரோன் ராம்சே, ஸ்ட்ரைக்கர் கரேத் பேல் ஆகியோரை நம்பியே அணி உள்ளது. அதேபோல் விங்பேக்ஸ் வீரர்கள் கானர் ராபர்ட்ஸ், நெகோ வில்லியம்ஸ் தங்களது திறமையை நிரூபித்த வீரர்கள்.

பலவீனம்: ராம்சே, பேல் இருவருமே மூத்த வீரர்கள். மேலும் அடிக்கடி காயமடைந்து வருகின்றனர். வலுவான அணியினருக்கு எதிராக வெற்றி பெறும் அனுபவமும், பெரிய போட்டியில் பங்கேற்கும் மனோபாவமும் அவர்களிடம் இல்லை.

ஈரான் - தரவரிசை 20; பயிற்சியாளர் - கார்லோஸ் குயிரோஸ்: கத்தார் உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற முதல் அணி ஈரான் ஆகும். ஆசிய அளவில் பலமாக இருக்கும் ஈரான், உலகக் கோப்பை தொடர்களில் பெரும்பாலும் லீக் சுற்றில் வெளியேறும் முதல் அணியாக இருக்கும். உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, அந்த அணி ‘ஒன் மேட்ச் வொன்டர்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது, உலகக் கோப்பை வரலாற்றைப் பார்க்கும்போது, லீக் சுற்றில் ஒரு வல்லமைமிக்க அணியை வீழ்த்தும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

பலம்: உலகக் கோப்பையில் விளையாடிய அனுபவம் கொண்ட 15 வீரர்கள் உள்ளனர். மெஹதி தரேமி, சர்தார் அஸ்மவுன், அலிரேசா ஜஹன்பக் ஷ் ஆகியோர் அணியின் பலமான வீரர்களாக உள்ளனர்.

பலவீனம்: குய்ரோஸ் தேசிய பயிற்சியாளராக திரும்பிய பிறகு வீரர்கள் இரு பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். நாட்டில் நடந்து வரும் உள்நாட்டு உரிமைப் போராட்டங்கள் அணிச் சூழலையும் பாதித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x