Published : 19 Nov 2022 06:26 AM
Last Updated : 19 Nov 2022 06:26 AM

FIFA WC 2022 | ஐரோப்பிய கிளப் வீரர்கள் ஆதிக்கம் செலுத்தும் குரூப் எஃப்

குரூப் எஃப்-ல் பெல்ஜியம், குரோஷியா, கனடா, மொராக்கோ அணிகள் உள்ளன. இந்த பிரிவில் உள்ள அணியின் பெரும்பாலான வீரர்கள் ஐரோப்பிய கிளப்களில் விளையாடி வருகின்றனர். சாம்பியன் பட்டம் வெல்லக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் அணிகளின் வரிசையில் பெல்ஜியம், குரோஷியா அணிகள் உள்ளன. கனடா 1986-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது உலகக் கோப்பைக்குள் நுழைந்துள்ளது. மொராக்கோ 6-வது முறையாக களமிறங்குகிறது.

பெல்ஜியம் - தரவரிசை 2; பயிற்சியாளர் - ராபர்டோ மார்டினெஸ்: கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவை போன்று கால்பந்தில் பெல்ஜியம் சோக்கர்ஸ் என அழைக்கப்படுகிறது. பெரிய அளவிலான தொடர்களில் முக்கியமான கட்டத்தில் அந்த அணி உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த தவறிவிடும். இதற்கு உதாரணம் 2018 உலகக் கோப்பை அரை இறுதி ஆட்டம். இந்த ஆட்டத்தில் பெல்ஜியம் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸிடம் தோல்வியடைந்தது. 2020-ம் ஆண்டு யூரோ கோப்பை கால் இறுதியில் இத்தாலியிடமும், யுஇஎஃப்ஏ நேஷன்ஸ் கோப்பை அரை இறுதியில் பிரான்ஸிடமும் பெல்ஜியம் வீழ்ந்திருந்தது. ரெட் டெவில்ஸ் என அழைக்கப்படும் பெல்ஜியம் கடந்த தொடரில் 3-வது இடம் பிடித்த நிலையில் கத்தாரில் அந்த நிலையை மேம்படுத்த முயற்சி செய்யும்.

பலம்: அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் ஐரோப்பா முழுவதிலும் உள்ள முதல்தர லீக்குகளில் தொடர்ந்து விளையாடுபவர்கள். ரியல் மாட்ரிட் கோல்கீப்பர் திபாட் கோர்டோயிஸ், விங்கர் ஈடன் ஹசார்ட், மான்செஸ்டர் சிட்டி மிட்ஃபீல்டர் கெவின் டி புரூய்ன், இண்டர் மிலனின் ரோமேலு லுகாகு போன்ற நட்சத்திர வீரர்கள் கிளப் வடிவத்தை சர்வதேச அரங்கில் பிரதிபலிக்க ஆயத்தமாக உள்ளனர்.

பலவீனம்: ஒருங்கிணைந்த திறனை வெளிப்படுத்தாதது பலவீனமாக பார்க்கப்படுகிறது. மேலும் வீரர்களின் உடற்தகுதியும் முக்கிய கவலையாக உள்ளது.

குரோஷியா - தரவரிசை 12; பயிற்சியாளர் - ஸ்லாட்கோ டாலிக்: பயிற்சியாளர் ஸ்லாட்கோ டாலிக் துணிச்சலாக சில மூத்த வீரர்களுக்கு பதிலாக இளம் வீரர்களை தேர்வு செய்துள்ளார். இருப்பினும் 37 வயதான ரியல் மாட்ரிட் நட்சத்திரம் லூகா மோட்ரிக்கை சுற்றியே அணி கட்டமைக்கப்பட்டுள்ளது. அவர், தனது உயர்மட்ட செயல் திறனால் அணியை மேம்படுத்தக் கூடியவராக திகழ்கிறார்.

பலம்: நடுகளம் பலமாக உள்ளது. மோட்ரிக்கை தவிர செல்சியாவின் மேடியோ கோவாசிச், இண்டர் மிலனின் மார்செலோ ப்ரோசோவிச், அட்லாண்டாவின் மரியோ பசாலிக் ஆகியோரும் வலுசேர்க்கக்கூடியவர்கள்.

பலவீனம்: கோல் அடிக்கும் திறன் அதிகம் இல்லாதது பலவீனமாக உள்ளது. டொட்டன்ஹாம் ஹாட்ஸ்பரின் இவான் பெரிசிச்சைத் தவிர, தரமான ஸ்ட்ரைக்கர் இல்லை. ஆண்ட்ரேஜ் கிராமரிக் சிறப்பாக செயல்படக்கூடியவர் என்றாலும் அவரிடம் இருந்து தொடர்ச்சியாக சிறந்த திறன் வெளிப்படுவது இல்லை.

மொரோக்கோ - தரவரிசை 22; பயிற்சியாளர் - வாலிட் ரெக்ராகுய: மொராக்கோ ஆப்பிரிக்க தகுதி சுற்றில் 100 சதவீத வெற்றியை பதிவு செய்தது. 1986-ம் ஆண்டு உலகக்
கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை பெற்றுள்ள மொராக்கோ இம்முறை லீக் சுற்றை கடப்பது கடினமே.

பலம்: மொராக்கோ அணியில் செல்சியா அணியின் அட்டாக்கிங் மிட்ஃபீல்டர் ஹக்கிம் ஜியெச் மற்றும் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைனின் ஆக்ரஃப் ஹக்கிமி போன்ற சில விதிவிலக்கான திறமையான வீரர்கள் உள்ளனர்.

பலவீனம்: நட்சத்திர வீரரான ஹக்கிம் ஜியெச் சிறந்த பார்மில் இல்லை. செல்சியா அணியில் கடந்த அக்டோபர் மாதம் வெறும் 17 நிமிடங்கள் மட்டுமே விளையாடினார் ஹக்கிம் ஜியெச்.

கனடா - தரவரிசை 41; பயிற்சியாளர் - ஜான் ஹெர்ட்மேன்: 36 வருடங்களுக்குப் பிறகு உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது கனடா. அந்த அணி இதற்கு முன்னர் 1986 உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருந்தது. பேயர்ன் முனிச் கிளப்பின் அல்போன்சா டேவிஸ் பிரதான வீரராக உள்ளார்.

பலம்: அல்போன்சா டேவிஸ், தஜோன் புக்கனன் ஆகியோர் மின்னல் வேகத்தில் பந்தை கடத்திச் சென்று எதிரணியினருக்கு நெருக்கடி கொடுக்கக்கூடியவர்கள்.

பலவீனம்: 36 வருட இடைவெளிக்குப் பிறகு உலகக் கோப்பையில் விளையாடும் கனடாவுக்கு வலிமையான அணிகளுக்கு எதிராக, குறிப்பாக மற்ற கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கு எதிராக விளையாடிய அனுபவம் இல்லை.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x