

தோஹா: கத்தார் நாட்டில் வரும் ஞாயிறு அன்று ஃபிஃபா உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இந்தத் தொடர் அந்த நாட்டில் 5 நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் நடைபெற உள்ளது. தொடரில் பங்கேற்று விளையாட உள்ள நாடுகளின் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் என பெருந்திரளான மக்கள் கூட்டம் ஆகாய மார்க்கமாக சென்று அங்கு லேண்ட் ஆகியுள்ளது. இந்தச் சூழலில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ள மைதானங்களில் பீர் மதுபானம் விற்பனைக்கு தடை விதித்துள்ளது கத்தார் அரசு.
கடந்த செப்டம்பர் வாக்கில் உலகக் கோப்பை ஏற்பாட்டுக் குழு மைதானம் மற்றும் ஃபேன் ஸோனில் மதுபான வகையான பீரை பரிமாற முடிவு செய்தது. அதற்கு தகுந்தது போல ஃபிஃபாவின் ஸ்பான்ஸரான பட்வைஸர் தயாரிப்பு பீர்களை மைதானத்தில் வழங்க ஃபிஃபா மற்றும் கத்தார் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. தற்போது அந்த முடிவில் யூ-டர்ன் அடித்துள்ளது கத்தார். அந்த நாட்டில் மதுபான விற்பனைக்கு பல்வேறு கெடுபிடிகள் அமலில் உள்ளன.
கடந்த 2014 வாக்கில் பிரேசில் நாட்டில் ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடர் நடைபெற்றபோது மைதானங்களில் பீர் விற்பனை செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. அதனை ஃபிஃபா அழுத்தம் கொடுத்த காரணத்தால் பிரேசில் அரசு அமல் செய்தது. ஃபிஃபா மற்றும் பட்வைஸர் தயாரிப்பு நிறுவனத்தின் இடையே கடந்த 1986 முதல் பார்ட்னர்ஷிப் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடரில் விளையாடும் 32 நாடுகளின் பீர்களை சேகரித்த முரட்டு ரசிகர்! - கத்தார் உலகக் கோப்பை தொடரில் பிரேசில், பெல்ஜியம், பிரான்ஸ், அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், மெக்சிக்கோ, நெதர்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, உருகுவே, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, குரோஷியா, செனகல், ஜப்பான், மொராக்கோ, செர்பியா, போலந்து, தென் கொரியா, துனிசியா, கேமரூன், கனடா, ஈக்குவேடார், சவுதி அரேபியா, கானா, வேல்ஸ், கோஸ்டாரிக்கா, ஆஸ்திரேலியா என 32 நாடுகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன.
இந்தச் சூழலில் இங்கிலாந்தின் செல்டனம் டவுனை சேர்ந்த கால்பந்தாட்டத்தின் தீவிர ரசிகரான கஸ் எனும் நபர், இந்தத் தொடரில் பங்கேற்று விளையாடும் 32 நாடுகளின் பீர்களையும் தலா ஒன்று வீதம் சேகரித்து, அதனைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு சக சமூக வலைதள பயனர்கள் வேடிக்கையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.