Published : 18 Nov 2022 02:39 PM
Last Updated : 18 Nov 2022 02:39 PM
வெலிங்டன்: இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நியூஸிலாந்து நாட்டில் உள்ள வெலிங்டன் நகரில் அமைந்துள்ள ஸ்கை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணி, நியூஸிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இந்த பயணத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்கள் அடங்கும். இதில் டி20 தொடர் முதலில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டிதான் இப்போது மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது.
“வீரர்கள் அனைவரும் இந்தத் தொடரில் விளையாட மிகவும் ஆர்வமாக உள்ளனர். கிரிக்கெட் விளையாட நியூஸிலாந்து சரியான இடம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று விளையாட முடியவில்லை. எங்கள் அணியில் உள்ள வீரர்கள் இளையவர்களாக இருக்கலாம். ஆனால், அனுபவத்தில் அல்ல. இவர்கள் அனைவரும் நிறைய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். சிலர் சர்வதேச போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.
நிச்சயம் இந்தத் தொடர் புதியவர்களுக்கான நல்வாய்ப்பாக அமையும் என கருதுகிறேன். உலகக் கோப்பை முடிந்துவிட்டது. நான் அதை கடந்து வந்துவிட்டேன். மீண்டும் சென்று நடந்த எதையும் நம்மால் மாற்ற முடியாது. இந்தத் தொடரில் விளையாட நாங்கள் ஆர்வமாக உள்ளோம்” என இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
UPDATE from Wellington
Both captains shake hands as the first #NZvIND T20I is called off due to persistent rain.#TeamIndia pic.twitter.com/MxqEvzw3OD— BCCI (@BCCI) November 18, 2022
இந்தத் தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், இளம் வீரர்கள் அடங்கிய அணியை பாண்டியா வழிநடத்துகிறார். இந்தத் தொடரின் அடுத்த டி20 போட்டி வரும் ஞாயிறு அன்று நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT