Published : 18 Nov 2022 06:40 AM
Last Updated : 18 Nov 2022 06:40 AM

கால்பந்து திருவிழா | எளிதான பிரிவில் நெய்மரின் பிரேசில்

பிரேசில்

குரூப் ஜி-ல் பிரேசில், சுவிட்சர்லாந்து, செர்பியா, கேமரூன் அணிகள் உள்ளன. தரவரிசை மற்றும் பார்ம் அடிப்படையில் பிரேசில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதில் பிரச்சினை இருக்காது.

பிரேசில் - தரவரிசை 1; பயிற்சியாளர் - டைட்: தென் அமெரிக்க தகுதி சுற்றில் பிரேசில் பிரமாதமாக விளையாடியது. 17 ஆட்டங்களில் 14-ல் வெற்றி கண்டது. 40 கோல்களை அடித்தது. அதேவேளையில் வெறும் 5 கோல்களை மட்டுமே வாங்கியது. 1930-ம் ஆண்டில் இருந்து அனைத்து தொடர்களிலும் விளையாடிய ஒரே அணி என்ற பெருமை பிரேசிலுக்கு உண்டு. மதிப்புமிக்க சாம்பியன் பட்டத்தை அந்த அணி 5 முறை கைகளில் ஏந்தியுள்ளது. கடைசியாக பிரேசில் 2002-ம் ஆண்டு பட்டம் வென்றிருந்தது.

பலம்: ஒட்டுமொத்த அணியும் பலத்துடன் காணப்படுகிறது. நெய்மர், ரிச்சர்லிசன், வினிசியஸ் ஜூனியர், ரோட்ரிகோ, ரபின்ஹா, ஆண்டனி, கேப்ரியல் ஜீசஸ், பெட்ரோ என நட்சத்திர பட்டாளங்கள் அதிகம் உள்ளது.

பலவீனம்: அணியின் தரவரிசைக்கு தகுந்தபடி திடமான ஃபுல்-பேக் இல்லை. டானிலோ, எடர் மிலிடாவோ, அலெக்ஸ் சாண்ட்ரோ, அலெக்ஸ் டெல்லெஸ் ஆகியோர் இன்னும் தேசிய அணியில் தங்கள் திறமையை நிரூபிக்கவில்லை.

சுவிட்சர்லாந்து - தரவரிசை 15; பயிற்சியாளர் - முராத் யாகின்: சீரற்ற தன்மையே சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய பிரச்சினை. 2010-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில் வலுவான ஸ்பெயினை வீழ்த்தியது. எனினும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறத் தவறியது. 2018 ரஷ்ய உலகக் கோப்பையில் பிரேசிலுக்கு எதிரான ஆட்டத்தை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது, ஆனால் நாக் அவுட் சுற்றில் சுவீடனிடம் தோல்வியடைந்தது.

2020-ம் ஆண்டு நடைபெற்ற யூரோ கோப்பையில் நாக் அவுட் சுற்றில் பிரான்ஸை வெளியேற்றிய சுவிட்சர்லாந்து கால் இறுதி சுற்றில் ஸ்பெயினிடம் ஷூட்அவுட்டில்
வீழ்ந்தது. போட்டியின் தினத்தில் எந்த அணியையும் வீழ்த்தும் திறன் சுவிட்சர்லாந்திடம் உள்ளது. ஆனால் பட்டம் வெல்லக்கூடிய அளவுக்கு செயல் திறனில் நிலைத்தன்மை இல்லை.

பலம்: உலக கால்பந்து அரங்கில் சிறந்த டிபன்டர்களை சுவிட்சர்லாந்து கொண்டுள்ளது. பின்வரிசையில் மானுவல் அகன்ஜி, ரிக்கார்டோ ரோட்ரிக்ஸ், நிக்கோ எல்வடி வலுவாக உள்ளனர். அதேபோன்று கோல்கீப்பர் யான் சோமர் அரண் போன்று அணியை பாதுகாக்கக்கூடியவர். தகுதி சுற்றில் 8 ஆட்டங்களில் 2 கோல்களை மட்டுமே சுவிட்சர்லாந்து வாங்கியிருந்தது.

பலவீனம்: சீரான திறனை வெளிப்படுத்தும் ஸ்ட்ரைக்கர் இல்லை. தகுதிச் சுற்றுகளில் முதல் எட்டு போட்டிகளில், சுவிட்சர்லாந்து 15 கோல்கள் வரை அடித்தது. ஆனால் அடுத்த ஆறு போட்டிகளில் ஒன்றுக்கு மேல் அடிக்க முடியவில்லை.

செர்பியா - தரவரிசை 21; பயிற்சியாளர் - டிராகன் ஸ்டோஜ்கோவிச்: 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் பிரேசில், சுவிட்சர்லாந்திடம் தோல்வியடைந்து லீக் சுற்றுடன் வெளியேறியது செர்பியா. பெரும்பாலும் லீக் சுற்றுடன் நடையை கட்டும் செர்பியா இம்முறை அந்த சோதனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கக்கூடும். தகுதி சுற்றில் அந்த அணி போர்ச்சுகலை பின்னுக்குத்தள்ளி தனது பிரிவில் முதலிடம் பிடித்து நேரடியாக கத்தாரில் விளையாட முன்னேறியிருந்தது. இது அணியின் நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. எதிரணி யாராக இருந்தாலும், கடைசி வரை விடாமல் கடுமையாகப் போராடும் குணம் கொண்டது செர்பியா அணி.

பலம்: செர்பியாவின் மிட்ஃபீல்ட் மற்றும் அட்டாக் ஒரு வலுவான ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவை கொண்டுள்ளது. டுசான் டாடிக் தலைமையில் மிட்ஃபீல்டர்கள் பந்தை முன்கள வரிசைக்கு துல்லியமாக கடத்தி கொடுக்கும் திறன் கொண்டவர்கள். முன்களத்தில் அலெக்ஸாண்டர் மிட்ரோவிக், லூகா ஜோவிக் மற்றும் டுசான் விலாஹோவிக் வலுவாக உள்ளனர்.

பலவீனம்: மோசமான டிபன்ஸ் பலவீனமாக உள்ளது. சென்டர்- பேக் நிகோலா மிலென்கோவிச்சுடன் இணைந்து விளையாடுவதற்கு திறன் மிகுந்த வீரர் இல்லை.

கேமரூன் - தரவரிசை 43; பயிற்சியாளர் - ரிகோபர்ட் சாங்: 8-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கிறது கேமரூன் அணி. இதன் மூலம் மற்ற ஆப்பிரிக்க அணிகளை விட அதிக முறை உலகக் கோப்பையில் விளையாடிய பெருமையை கேமரூன் கொண்டுள்ளது. தகுதி சுற்றில் அல்ஜீரியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் கத்தாரில் கால்பதித்தது கேமரூன்.

பலம்: கேமரூனில் எப்போதும் நல்ல கோல்கீப்பர்கள் உள்ளனர். இந்த முறை உறவினர்களான ஆண்ட்ரே ஓனானா மற்றும் ஃபேப்ரிஸ் ஒன்டோவா ஆகியோர் தங்கள் இலக்கை நிர்வகிப்பார்கள். எரிக் மாக்சிம் சவுபோ மோடிங், கார்ல் டோகோ எகாம்பி, வின்சென்ட் அபுபக்கர் ஆகியோர் அடங்கிய பல்துறை தாக்குதலைக் கொண்டுள்ளனர்.

பலவீனம்: தந்திரோபாய ரீதியாக விளையாடக்கூடிய சிறந்த அணிகளுக்கு எதிராக தடுமாற்றம் காண்கிறது கேமரூன் அணி. மேலும் ஐரோப்பிய கண்டங்களைச் சேர்ந்த அணிகளுக்கு எதிராக வெற்றி காண்பதில் தேக்கம் அடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x