Published : 17 Nov 2022 03:33 PM
Last Updated : 17 Nov 2022 03:33 PM
மெல்போர்ன்: டென்னிஸ் உலகின் நட்சத்திர ஆட்டக்காரரான ஜோகோவிச் எதிர்வரும் 2023 ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தடையை ஆஸ்திரேலிய அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதன் மூலம் இது சாத்தியமாகி உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் பங்கேற்க ஜோகோவிச் ஆஸ்திரேலியா சென்ற நிலையில், விசா சிக்கல் காரணமாக அதில் பங்கேற்க முடியாமல் அப்போது வெளியேறி இருந்தார். அவருக்கு விசா மறுக்கப்பட்டதற்கான பிரதான காரணம், அவர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததுதான். அது தொடர்பாக அவர் சட்டப் போராட்டம் நடத்தினார். இருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது அந்த நாட்டின் தடுப்பூசி கொள்கை அப்படி இருந்தது. அது உலக அளவில் கவனம் பெற்றிருந்தது.
இதே தடுப்பூசி கொள்கை காரணமாக அவர் அமெரிக்க ஓபன் தொடரிலும் பங்கேற்கவில்லை. கிராண்ட் ஸ்லாம் தொடர்களில், ஒற்றையர் பிரிவில் மட்டும் மொத்தம் 21 பட்டங்களை அவர் வென்றுள்ளார். இதில் 9 பட்டங்கள் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் வென்றது.
கடந்த மாதம் ஜோகோவிச் எதிர்வரும் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் விளையாட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் அவருக்கான தற்காலிக விசாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய நாட்டின் அமைச்சர் ஆண்ட்ரூ கில்ஸ் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் கரோனா தொடர்பான நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ள காரணத்தால் இது சாத்தியமாகி உள்ளது.
“கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஆஸ்திரேலிய ஓபன் எனது வெற்றிகரமான தொடராகும். மறக்க முடியாத நினைவுகள் எனக்கு அதில் உண்டு” என ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT