24 ஆண்டுகள், 34,357 ரன்கள்: 2013-ல் இதே நாளில் சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து விடைபெற்ற சச்சின்

சச்சின் டெண்டுல்கர் | கோப்புப்படம்
சச்சின் டெண்டுல்கர் | கோப்புப்படம்
Updated on
2 min read

கிரிக்கெட் உலகின் மகத்தான வீரர்களில் ஒருவர் சச்சின் டெண்டுல்கர். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான இவரை கிரிக்கெட்டின் கடவுள் என போற்றுவர். அவர் இதே நாளில் கடந்த 2013 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது சாதனைகளை இந்த தருணத்தில் கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம்.

முன்பெல்லாம் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் ரசிகர்கள் பலரும் சச்சின் அவுட் என்றால் டிவியை ஆஃப் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவார்கள். ஏனெனில், சச்சின் அவுட் என்றால் இந்தியா ஆட்டத்தில் தோல்வி என அர்த்தம். அந்த அளவிற்கு அட்டகாசமான ஆட்டக்காரர் அவர். காலப்போக்கில் அது மாறி இருந்தது.

இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் 1989 முதல் 2013 வரை அவர் விளையாடி உள்ளார். சுமார் 24 ஆண்டுகள். 1989, நவம்பர் 15 அன்று சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் இன்னிங்ஸை பாகிஸ்தான் அணிக்கு எதிராக கராச்சியில் அவர் விளையாடி இருந்தார். கடந்த 2013 நவம்பரில் தனது சொந்த ஊரான மும்பை மண்ணில் கடைசி டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி இருந்தார்.

1989 முதல் 2013 வரையிலான இந்த 24 ஆண்டு காலத்தில் மூன்று தலைமுறையை சேர்ந்த வெவ்வேறு கிரிக்கெட் வீரர்களுடன் அவர் விளையாடி இருந்தார். கபில் தேவ், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரவி சாஸ்திரி போன்றவர்களுடன் தொடங்கி கங்குலி, திராவிட் உடன் இணைந்து பயணித்த பின்னர் சேவாக், யுவராஜ், தோனி, கோலி போன்ற வீரர்களுடன் விளையாடிவிட்டு ஓய்வு பெற்றவர் சச்சின். அந்த 24 ஆண்டுகளில், 664 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், 34,357 ரன்கள், 100 சதங்கள் மற்றும் 201 விக்கெட்டுகளையும் சச்சின் கைப்பற்றி இருந்தார். அவரது சாதனைகள் சில…

  • டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரராக அறியப்படுகிறார்.
  • ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர்தான் உலக அளவில் அதிக ரன்கள் எடுத்த வீரர். மொத்தம் 18,426 ரன்கள் குவித்துள்ளார்.
  • டெஸ்ட், டி20, ஒருநாள் என அனைத்து ஃபார்மெட்டுகளையும் சேர்த்து 30 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த கிரிக்கெட் வீரர்.
  • உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இந்தியர்.
  • டெஸ்ட் (51) மற்றும் ஒருநாள் (49) என அதிக சதங்களை பதிவு செய்துள்ள வீரர். மொத்தம் 100 சர்வதேச சதங்கள்.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரே ஆண்டில் ஆயிரம் ரன்களை கடந்தவர் என்ற சாதனையை 7 முறை படைத்துள்ளார்.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதம் விளாசிய கிரிக்கெட் வீரர்.
  • ராகுல் திராவிட் உடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மொத்தம் 6920 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார்.

சச்சின் கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் ‘சச்சின், சச்சின்’ எனும் முழக்கம் இன்றும் சச்சின் ரசிகர்களின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டு தான் உள்ளது. சச்சினின் சாதனைகள் என்றாவது ஒருநாள் முறியடிக்கப்படலாம். ஆனால் இந்திய அணிக்காக அவரது கிரிக்கெட் பங்களிப்பு என்றென்றும் ஒரு சகாப்தமாக இருக்கும்.

சச்சின் சலாம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in