Published : 15 Nov 2022 05:09 PM
Last Updated : 15 Nov 2022 05:09 PM

“நாட்டுக்காக கேட்கிறோம்..." - ஒருநாள் கிரிக்கெட் ஓய்வை ஸ்டோக்ஸ் மறுபரிசீலனை செய்ய கோரும் குரல்கள்

பென் ஸ்டோக்ஸ் | கோப்புப்படம்

அண்மையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் அணி. அதன் மூலம் ஒரே நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பையை கைவசம் வைத்துள்ளது அந்த அணி. அதற்கு முழு காரணமாக இருக்கும் வீரர்களில் ஒருவர் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்.

31 வயதான அவர் கடந்த ஜூலை வாக்கில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்தச் சூழலில் இது மாதிரியான ஒரு மேட்ச் வின்னர் தங்கள் அணிக்கு தேவை என்பதால் அவரை நோக்கி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், பயிற்சியாளர், முன்னாள் வீரர் போன்றவர்கள் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் எழுந்துள்ளது.

2019 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டி மற்றும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி என முக்கிய போட்டிகளில் மேட்ச் வின்னராக ஜொலிக்கும் திறன் படைத்த வீரரை தவறவிட எந்த அணிதான் விரும்பும். அதோடு அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதைக் கருத்தில் கொண்டே இந்த வேண்டுகோள் எழுந்துள்ளது.

“பென் ஸ்டோக்ஸ் அடுத்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் நீங்கள் விளையாட முடியுமா? நாட்டுக்காக இதை கேட்கிறேன்” என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ட்வீட் மூலம் இதனை கேட்டுள்ளார்.

தன்னால் 100 சதவீதத்தை இந்த ஃபார்மெட்டில் கொடுக்க முடியவில்லை என ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வின் போது சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

“அவர் என்னிடம் ஒருநாள் கிரிக்கெட் ஓய்வு குறித்து சொல்லிய போதே ‘அன்ரிட்டையர்’ எனும் வார்த்தையை அவரிடம் நான் சொல்லி இருந்தேன். அந்த முடிவை அவர் தன்னிச்சையாக அப்போது அவர் எடுத்தார். இதோ 50 ஓவர் உலகக் கோப்பை ஆண்டு தொடங்குகிறது. இந்த நிலையில் நாங்கள் டி20 கிரிக்கெட்டில் அதிகம் விளையாடப் போவதில்லை. அதனால் அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்யலாம்” என இங்கிலாந்து அணி பயிற்சியாளர் மேத்யூ மோட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கிரிக்கெட்டில் இருந்து காலவரையின்றி பிரேக் எடுத்துக் கொள்வதாக சொல்லி மீண்டும் களத்திற்கு கம்பேக் கொடுத்தவர்தான் ஸ்டோக்ஸ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x