அர்ஜுனா விருது பெறும் ஜெர்லின் அனிகா... மதுரை மாநகராட்சிப் பள்ளியில் படித்து சர்வதேசப் போட்டிகளில் சாதித்தவர்!

ஜெர்லின் அனிகா
ஜெர்லின் அனிகா
Updated on
2 min read

மதுரை: மதுரை மாநகராட்சிப் பள்ளியில் படித்த காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பேட்மின்டன் வீராங்கனையான ஜெர்லின் அனிகா, தேசிய அளவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ளார். காதுகேளாதோர் பிரிவில் அர்ஜுனா விருது பெறும் முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

மதுரை மாவட்டம் வில்லாபுரம் பகுதியை சோ்ந்தவர் ஜெயரட்சகன், லீமாரோஸ்லின் தம்பதியரின் மகள் ஜொ்லின் அனிகா (வயது 18). தற்பாது மதுரை லேடி டோக் கல்லூரி முதலாம் ஆண்டு பொருளாதாரம் படிக்கிறார். பள்ளிப் படிப்பை மதுரை மாநகராட்சி அவ்வை மேல் பள்ளியில் பயின்றார். சிறு வயது முதலே பேட்மின்டன் விளையாட்டில் பயிற்சி பெற்று வந்துள்ளார். மாநகராட்சிப் பள்ளியில் படித்துக்கொண்டே மாநில, தேசிய மற்றும் சர்வதேச மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்று சாதித்துள்ளார்.

2017-ம் ஆண்டு துருக்கியில் நடைபெற்ற DURF ஒலிம்பிக்கில் 5-வது இடமும், 2018 ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஆசியா பசிபிக் பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் 2 வெள்ளிப் பதக்கங்களும் 1 வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். தொடர்ந்து சீன தைபேயில் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் ஒரு தங்கப் பதக்கமும், 2 வெள்ளிப் பதக்கங்களும், 1 வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். பிரேசிலில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான பாராலிம்பிக் பேட்மின்டன் பிரிவுப் போட்டியில் பெண்கள் பிரிவு, கலப்பு இரட்டையர், பெண்கள் இரட்டையர் ஆகிய பிரிவுகளின் கீழ் 3 தங்கப் பதக்கம், 21 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவிலும் போட்டியிலும் 3 தங்கப் பதக்கம் என 6 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

இது தவிர மாணவி ஜெர்லின் அனிகா பல்வேறு நாடுகளுக்கு சென்று போட்டிகளில் வெற்றிப் பதக்கங்கள் வென்றுவந்துள்ளார். இந்த நிலையில், அர்ஜுனா விருதுக்கு ஜெர்லின் அனிகா தேர்வாகியுள்ளார். அடுத்த மாதம் 30-ம் தேதி டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சியில் இந்த விருதை ஜெர்லின் அனிகா பெறுகிறார். இதன் மூலம் காதுகேளாதோர் பிரிவில் அர்ஜுனா விருது பெறும் முதல் வீராங்கணை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இதனிடையே, அர்ஜுனா விருதுக்கு தேர்வானது குறித்து ஜெர்லின் அனிகா தனது தந்தை வாயிலாக அவர் கூறியதாவது: "ஹெப்பி ரொம்ப சந்தோஷம்" என தனது எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

விருதுக்கு தேர்வானது குறித்து அவரது தந்தை ஜெயரட்சகன் கூறுகையில், ‘‘ஜெர்லின் அனிகாவிற்கு இந்தளவுக்கு ஓர் உயரிய விருது கிடைக்கும் என்பதை கனவில் கூட நினைக்காத விஷயம்’’ என்றார். பயிற்சியாளர் சரவணன் கூறுகையில், ‘‘ஜெர்லின் அனிகா போன்ற மாணவிக்கு அர்ஜுனா விருது கிடைத்துள்ளது, அவரை போன்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது’ ’என கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in