

அடுத்து வரும் 12 மாதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் விளையாடும் கடைசி நாட்களாக இருக்கலாம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சூசகமாக தெரிவித்துள்ளார். கிரிக்கெட் அசல் ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதைதான் அவர் இப்படி சொல்லி உள்ளதாக தெரிகிறது.
36 வயதான வார்னர் கடந்த 2009 முதல் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். அவர் 2011 வாக்கில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் கண்டார். இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள வார்னர், 7817 ரன்கள் குவித்துள்ளார். 24 சதம் மற்றும் 34 அரை சதங்கள் இதில் அடங்கும். அதிகபட்சமாக 335 ரன்கள் (நாட்-அவுட்) எடுத்துள்ளார்.
2023 ஜூனில் நடைபெற உள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு பிறகு அவர் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இப்போது புள்ளிகள் அடிப்படையில் இறுதிக்கு தகுதி பெற ஆஸ்திரேலிய அணிக்கு வாய்ப்புகள் அதிகம். அண்மையில் முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அவர் பேட்டிங்கில் சோபிக்க தவறினார்.
“அடுத்த 12 மாதங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் விளையாடுவது கடைசியாக இருக்கலாம். நான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறேன். எனக்கு வயதாகி விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் நாம் எதை விரும்புகிறோமோ அதை அடைவதில் கவனமாக இருக்க வேண்டும்” என வார்னர் தெரிவித்துள்ளார்.