

வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் செய்யக் கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் பவுலர் ஷமியின் ‘கர்மா’ ட்வீட் குறித்து கருத்து சொல்லியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷஹித் அஃப்ரிடி. அவர் சக கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தருக்கு ஆதரவாக இதனை தெரிவித்துள்ளார்.
ஞாயிறு அன்று நடப்பு டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி இருந்தன. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. அதை தொடர்ந்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் அக்தர் ட்வீட் செய்திருந்தார்.
அவர் உடைந்த இதயத்தின் எமோஜியை பகிர்ந்து ட்வீட் செய்திருந்தார். அதற்கு, ‘மன்னிக்கவும் சகோதரா. இதை கர்மா என்பார்கள்’ என ஷமி பதில் ட்வீட் போட்டிருந்தார். அது ரசிகர்கள் இடையே கவனம் பெற்றது. இந்த நிலையில் அது குறித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அஃப்ரிடி இடம் கருத்து கேட்கப்பட்டது.
“வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் செய்யக்கூடாது. நாமே இது போல செய்தால் மக்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும். நாம் கிரிக்கெட் வீரர்கள். ரோல் மாடல்கள். இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நாம் அனைவரும் அண்டை நாட்டை சேர்ந்தவர்கள். விளையாட்டு மூலம் நமது உறவு மேம்படும். நாம் அவர்களுடனும், அவர்கள் நம் மண்ணிலும் விளையாட வேண்டும்.
ஓய்வு பெற்ற வீரர்கள் கூட இதனை செய்யக்கூடாது. இப்படி இருக்கும் நிலையில் தற்போதைய அணியில் விளையாடி வருபவர் இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்” என அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.