Published : 14 Nov 2022 06:31 PM
Last Updated : 14 Nov 2022 06:31 PM

வீரர்கள் மாறலாம்... ஆட்டத்தில் மாற்றமில்லை! - 2015-க்குப் பிறகு மோர்கன் அமைத்த பாதையில் இங்கிலாந்தின் வெற்றிப் பயணம்

2022 டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்றது டி20 கிரிக்கெட்டின் சட்டகத்தையே மாற்றப்போகிறது என்று நிபுணர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது, இனி டி20 கிரிக்கெட்டை மற்ற அணிகளும் இங்கிலாந்தைப் போலவே ஆடும் என்பதே அந்தக் கருத்தின் சாராம்சமாகும்.

2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இங்கிலாந்து அணிக்கு ஒரு மிகப் பெரிய அவமானகரமான தொடராக அமைந்தது. எப்படியெனில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 111 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அடுத்ததாக நியூஸிலாந்தில் வெலிங்டனில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 33 ஓவர்களில் 123 ரன்களுக்குச் சுருண்டது. பதிலுக்கு நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஸ்டீவ் ஃபின் போன்ற இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களை மைதானத்துக்கு வெளியே அடித்து 25 பந்துகளில் 77 ரன்களை 8 பவுண்டரி 7 சிக்சர்களுடன் பறக்க விட்டு ஆட்டத்தை 12.2 ஓவர்களில் முடித்தெறிந்தார். 8 விக்கெட்டுகளில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.

இதோடு அல்லாமல் அந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி, இலங்கைக்கு எதிராக ஜோ ரூட் சதத்துடன் 309/6 என்று விளாசியும் இலங்கை அணி திரிமானே, சங்கக்காரா சதங்களுடன் 312/1 என்று இலக்கை விரட்டி இங்கிலாந்தை படுகேவலமாகத் தோற்கடித்தது. இவையெல்லாம் போதாதென்று வங்கதேச அணியிடமும் தோல்வி கண்டு இழிவுபட்டது. இப்படி மோர்கன் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி படுதோல்விகளைச் சந்தித்து வந்த பிறகுதான், மோர்கன் அணியின் வீரர்கள் சேர்க்கையை மாற்றி, புதிய அணுகுமுறையை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் புகுத்தினார்.

அதன் பிறகுதான் 2019 உலகக்கோப்பை 2021 டி20 உலகக்கோப்பை அரையிறுதி, 2022 உலகக் கோப்பை சாம்பியன் என்று படிப்படியாக இங்கிலாந்து வளர்ந்து இன்று வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் பெரிய அசுரனாக எழுந்து அச்சுறுத்துகிறது. அந்த 2015 அணியிலிருந்து இன்று எஞ்சியிருப்பவர்கள் ஜாஸ் பட்லரும் மொயீன் அலியும் மட்டுமே. மோர்கன் சமீபத்தில் ரிட்டையர் ஆனது குறிப்பிடத்தக்கது.

2015-ல் தான் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தன் இயக்குநராக ஆண்ட்ரூ ஸ்ட்ராஸை நியமித்தது. இவரும் மோர்கனும் இணைந்துதான் இங்கிலாந்தை இப்படி ஒரு அசுரத்தனமான டீமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மாற்றினர்.

ஸ்ட்ராஸ் முதலில் செய்தது என்னவெனில் வெறும் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை மட்டும் ஆடும் வீரர்களுக்கு சம்பளத்தை கடுமையாக உயர்த்தினார். அதாவது, கவுண்ட்டி கிரிக்கெட் சம்பளமும் உண்டு அதற்கு மேல் ஸ்ட்ராஸ் உயர்த்திய கூடுதல் சம்பளமும் உண்டு. இது வெள்ளைப்பந்து கிரிக்கெட் மீது வீரர்களின் ஆர்வத்தைப் பயங்கரமாக அதிகரித்தது. இதற்குப் பிறகுதான் ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலான், டாம் பேண்ட்டன், டாம் கரன், கிறிஸ் ஜோர்டான், போன்ற பிரமாதமான வெள்ளைப்பந்து அதிரடி பேட்டர்களும் பவுலர்களும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்படலாயினர்.

இவரோடு ஸ்ட்ராஸ் செய்த இன்னொரு காரியம் டிரிவர் பெய்லிஸ் என்பவரை தலைமைப் பயிற்சியாளராக நியமித்தார். அவரது மந்திரம் என்னவெனில் ‘வெள்ளைப்பந்து கிரிக்கெட்டா அடி இல்லையேல் மடி’ என்பதாக இருந்தது. இதனையடுத்து 2015 உலகக் கோப்பை அவமானத்துக்குப் பிறகு எழுந்த இங்கிலாந்து வெற்றி-தோல்வி விகிதத்தில் இந்திய அணிக்கு அடுத்ததான இடத்துக்கு உயர்ந்தது. பெய்லிஸ், மோர்கனின் தாரக மந்திரமே, கொஞ்சம் செட்டில் ஆகிவிட்டு அடிப்பது என்பதெல்லம் பழைய கதை, இறங்கியவுடனேயே ப்ளே என்றவுடன் சாத்துப்படி நடக்க வேண்டும். இதுதான் அவரது மாஸ்டர் ஸ்ட்ரோக். ஒருவர் நிற்பது, அவரைச்சுற்றி மற்றவர்கள் ரன்களை அடித்து எடுப்பது என்பதெல்லாம் பழைய அணுகுமுறை என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

யார் இறங்கினாலும் 30-40 பந்துகளில் அரைசதம், இல்லையா 15 பந்துகள்தான் ஆடுகிறார் என்றால் அவர் குறைந்தது 25 ரன்களையாவது அந்த 15 பந்துகளில் எடுக்க வேண்டும். இதற்காக பயிற்சிகளும் கடுமையாக்கப்பட பல அதிரடி வீரர்கள் வரிசையாக எழுச்சி கண்டனர். 2015 தோல்விக்குப் பிறகு இங்கிலாந்து அணியின் சராசரி ரன் விகிதம் ஒருநாள் கிரிக்கெட்டில் 6.29. 2015-2019 உலகக் கோப்பைக் காலக்கட்டங்களில் இங்கிலாந்தின் ஸ்கோர் ஒரு இன்னிங்சில் 300 ரன்களுக்கும் மேல் எடுப்பதென்பது இரட்டிப்பாகி அனைவரையும் மலைக்கச் செய்தது.

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயான் மோர்கன் உள்ளிட்டோர் எழுச்சி கண்டனர். பென் ஸ்டோக்ஸ், பட்லர், மொயின் அலி பின்னால் இறங்கி வெளுத்து வாங்கத் தொடங்கினர். கடைசியில் ஆதில் ரஷீத், லியாம் பிளெங்கெட் போன்றோரும் பேட்டிங்கில் உதவிகரமாக இருந்தனர். கடைசி வரை அடித்து ஆட பேட்டர்கள் இருந்தனர். ஒருநாள் போட்டிகளில் 150+ ஸ்கோர்கள் இங்கிலாந்து வீரர்களிடமிருந்து அதிகம் வந்தன. 2011 உலகக்கோப்பை முதல் 2015 உலகக்கோப்பை வரையிலும் இங்கிலாந்தில் ஒரு வீரர் கூட 150 ரன்களை ஒருநாள் போட்டியில் எடுத்ததில்லை.

பிட்சை பேட்டிங் பிட்ச் ஆக மாற்றிய நகாசு வேலை: இவையெல்லாம் சரி. ஆனால் என்ன செய்தார்கள் தெரியுமா? பிட்ச் என ஒன்று இருக்கிறதே அது ஸ்விங் ஆகும், வேகமெடுக்கும். இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று 2015க்கு பிறகு முழு பேட்டிங் பாரடைஸ் பிட்ச்களாக போட்டனர், பேட்டிங் சொர்க்கபுரிகளாக மாறியது இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் பிட்ச்கள். புதிய பந்திலும் சாத்தலாம் பழைய பந்தில் கேட்கவே வேண்டாம். இதனையடுத்து 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு ஒரு அணி 400 ரன்கள் எடுப்பது என்பது 5 முறை நடந்திருந்தால் அதில் இங்கிலாந்து 3 முறை 400+ ரன் ஸ்கோரை எடுத்தது.

இதன் முத்தாய்ப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2018-ல் உலக சாதனையான 481 ரன்களை எடுத்தது இங்கிலாந்து. அதன் பிறகு தங்கள் உலக சாதனையையே உடைத்து நெதர்லாந்துக்கு எதிராக 498 ரன்களைக் குவித்தது. டி20 கிரிக்கெட்டில் இயான் மோர்கன் கேப்டன்சியில் இங்கிலாந்து 72 போட்டிகளில் 42 போட்டிகளில் வென்று 27-ல் மட்டுமே தோற்றுள்ளது, இது தோனியின் வெற்றி விகிதத்தை விட கொஞ்சம் சிறந்ததாகும்.

ஒருநாள் கிரிக்கெட்டில் மோர்கன் கேப்டன்சியில் இங்கிலாந்து ஆடிய 126 போட்டிகளில் 76-ல் வென்றுள்ளது 40-ல் தோற்றுள்ளது. இந்தப் பின்னணியில்தான் மோர்கன் கேப்டன்சியில் வளர்த்தெடுக்கப்பட்ட தத்துப் பிள்ளையாக ஜாஸ் பட்லர் கேப்டனாக ஆனார். முதலில் மோர்கன் பாணியை இவர் கடைப்பிடிக்க கொஞ்சம் தயக்கம் காட்டினார், ஆனால் அதன் பிறகு இது சரியாக வராது என்று தங்கள் பழைய பாணிக்கு மீண்டும் திரும்பினர். அதன் விளைவுதான் 2022 உலகக்கோப்பை சாம்பியன் பட்டம். இந்தியாவுக்கு எதிராக அரையிறுதியில் அவர்கள் ஜெயித்த அதிரடி விதம் மோர்கனை நினைவு படுத்தியது என்றால் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விக்கெட்டுகளை இழந்தாலும் முழுக்கட்டுப்பாட்டுடன் எப்படி இருந்தாலும் நாங்கள்தான் வெல்வோம் என்று இன்னிங்சை பில்ட் அப் செய்து வென்றது மோர்கன்/பட்லர் கலவை ரகம்.

காரணம் டி20 கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் எடுத்துள்ள புதிய அவதாரம், வெற்றிகர பினிஷர் அவதாரம். இதை அவர் திறம்படச் செய்து வருகிறார், இனிமேலும் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். பவர் ப்ளேவுக்குள் ஸ்டோக்ஸ் இறங்க நேரிட்டாலும் அவர் ஒருமுனையில் சரிவை தடுத்து நிறுத்துபவராகவும் இறுதியில் என்ன ஸ்கோராக இருந்தாலும் அதிரடியில் எட்டி விடுபவராகவும் ஒரு புதிய பினிஷராக எழுச்சி பெற்றுள்ளார்.

அதாவது இங்கிலாந்து செய்த புரட்சிகர மாற்றம் என்னவெனில் யார் இறங்கினாலும் வேகமாக, ஆக்ரோஷமாக விரைவு கதியில் ரன்கள் எடுக்க வேண்டும், சீரான முறையில் எடுக்க வேண்டும் ஒரு தொடரில் இவர் 5 அரைசதங்களை எடுத்தார் என்பதெல்லாம் வீண் வேலை என்கிறார் பட்லர். வின்னிங் டோட்டல் என்ன? அதை எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆட வேண்டும். இதுதான் பட்லரின் தாரக மந்திரம்.

2015- உலகக் கோப்பையில் அடிலெய்டில் வங்கதேசத்திடம் உதை வாங்கி வெளியேறிய இங்கிலாந்து. அதன் பிறகு இத்தனை மாற்றங்களை திட்டமிட்டு செய்து, அதன் பிறகே ஐந்து ஐசிசி வெள்ளைப்பந்து தொடர்களில் இங்கிலாந்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இரண்டில் உலக சாம்பியன்கள், ஒருமுறை ரன்னர்கள். அரையிறுதிகள் இரண்டு. பேர்ஸ்டோ, மார்க் உட், ஜோப்ரா ஆர்ச்சர், ஜேசன் ராய் போன்றோர் இல்லாமலேயே இதனை சாதித்துள்ளனர். வீரர்கள் மாறலாம்... அணுகுமுறையில் மாற்றமில்லை என்பதே இங்கிலாந்தின் இப்போதைய வெற்றி மந்திரம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x