

இங்கிலாந்து தொடருக்கான செலவினங்களை பிசிசிஐ-யே மேற்கொள்ளலாமா அல்லது தங்களால் பணப்பட்டுவாடா செய்ய முடியாது என்றால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தையே இதனை மேற்கொள்ளுமாறு கூறலாமா என்று பிசிசிஐ, லோதா கமிட்டியிடம் வழிகாட்டுதல் கோரியிருந்ததையடுத்து, இங்கிலாந்து தொடர் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்டதல்ல என்று கூறி நிதி பரிமாற்ற விவரங்களை அளிக்க பிசிசிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.
பிசிசிஐ செயலர் அஜய் ஷிர்கே லோதா கமிட்டியிடம் வழிகாட்டுமாறு கோரிக்கை வைக்க அதற்கு லோதா கமிட்டி தனது பதிலில், “இருதரப்பு கிரிக்கெட் தொடர் கொள்கை பற்றிய பிசிசிஐ-இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் எங்களது அதிகார எல்லைக்குட்பட்டதல்ல. பணப் பட்டுவாடாவை பொறுத்தவரையில் பிசிசிஐ நேரடியாக இதனை மேற்கொள்ள வேண்டுமென்றால் பிசிசிஐ நிதி பரிமாற்ற விவரங்களை எங்களிடம் அளிக்காமல் நாங்கள் அது குறித்த எந்த ஒரு வழிகாட்டுதலையும் மேற்கொள்ள முடியாது” என்று தெரிவித்துள்ளது.
மேலும், லோதா குழு செயலர் கோபால் சங்கரநாராயண் தனது மின்னஞ்சலில், “கிரிக்கெட் போட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க வேண்டுமெனில், உச்ச நீதிமன்றம் தனடு ஜூலை 18, அக்டோபர் 7 மற்றும் 21-ம் தேதிகளில் அளித்த உத்தரவுகளுக்கு இணங்க செயல்பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
அதாவது ஒப்பந்ததாரர்கள், விளம்பரதாரர்கள் நியமனம், மற்றும் அடையாளம் காணும் நடவடிக்கைகள் கமிட்டியின் பணியல்ல. கமிட்டியின் பணி என்னவெனில் ஒப்பந்தத் தொகையின் உச்ச வரம்பை நிர்ணயிப்பதே. எனவே நவம்பர் 8-ம் தேதிக்குள் சுயேச்சை தணிக்கையாளர் நியமனம் மற்றும் ஐபிஎல் டெண்டர் விவரங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்குமாறு பிசிசிஐ-க்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், லோதா கமிட்டி பிசிசிஐ-க்கு தெரிவிக்கும் போது, 24 மற்றும் 29 அக்டோபர் ஆகிய தேதிகளில் கமிட்டி மேற்கொண்ட மின்னஞ்சல்களுக்கு இதுவரை எந்த வித உறுதியான பதிலையும் பிசிசிஐ அளிக்கவில்லை என்று சுட்டிக்காட்டியது, “21 அக்டோபர் 2016-ல் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் கூறப்பட்டவைகளை பிசிசிஐ அமல் செய்வதற்கான எந்த வித உறுதியையும் இதுவரை அளிக்கவில்லை, அந்த உத்தரவுகள் வெறும் ஃபார்மாலிட்டி அல்ல” என்று எச்சரித்துள்ளது.
மேலும் பிசிசிஐ-யிடமிருந்து லோதா கமிட்டி சமர்ப்பிக்க கோரியுள்ள விவரங்கள்:
1) குறிப்பிடப்பட்ட தனிப்பட்ட ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றின் ஒப்பந்த மதிப்பு
2) ஒவ்வொரு ஒப்பந்தத்தின் கால அளவு மற்றும் ஏற்கெனவே உள்ள ஒப்பந்தம் எப்போது காலாவதியாகிறது.
3) ஒப்பந்ததாரர்கள் நியமனத்தில் ஏற்கெனவே கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் பற்றிய விவரங்கள்
4) ஒப்பந்தம் அளிக்கப்படுபவர்களுக்கான டெண்டர் நடைமுறைகள், ஒப்பதம் மின் - ஏலம் மூலம் நடக்கிறதா அல்லது இல்லையா.
5) ஒவ்வொரு பிரிவிலும் ஒப்பந்தங்களின் ஒட்டுமொத்த மதிப்பு மற்றும் அனைத்து ஒப்பந்தங்களின் ஒட்டுமொத்த மதிப்பு விவரங்கள்.
“மேற்கண்ட விவரங்களை அளித்தால் மட்டுமே கமிட்டி அதனை ஆராய்ந்து உச்ச வரம்பு மதிப்பை நிர்ணயம் செய்ய முடியும். மேலும் தனிப்பட்ட தணிக்கையாளர் நியமனம் அவரது பணிகள் அவருக்கான ஒப்பந்தம் ஆகியவற்றை நிர்ணயிக்க முடியும், எனவே இந்தத் தகவல்களை 5 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என்று லோதா கமிட்டி செயலர் கோபால் சங்கரநாராயண் தனது மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.