Published : 02 Nov 2016 02:37 PM
Last Updated : 02 Nov 2016 02:37 PM

ஆஸி.-தென் ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட் பெர்த்தில் நாளை தொடக்கம்: வெற்றி யாருக்கு?

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை (வியாழன்) பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவை 5-0 என்று தோற்கடித்தது தென் ஆப்பிரிக்கா. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது.

2014-ம் ஆண்டு இரு அணிகளும் மோதிய போது ரியான் ஹாரிஸ், மிட்செல் ஜான்சன் ஆகியோர் அபாரமாக பந்து வீசி கேப்டவுனில் தொடரை வென்று தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் முதலிடத்தை பறித்தது ஆஸ்திரேலியா.

ஆனால் இப்போது டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியா 3-ம் இடத்திலும் தென் ஆப்பிரிக்கா 5-ம் இடத்திலும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா தனது கடைசி 12 டெஸ்ட் போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. தற்போது அந்த அணியின் கேப்டனும் அபாரமான பேட்ஸ்மெனுமான ஏ.பி.டிவில்லியர்ஸ் தொடர்ச்சியான காயங்கள் காரணமாக ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2012-ல் தென் ஆப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலியா உள்நாட்டில் டெஸ்ட் தொடரை இழந்த பிறகு உள்நாட்டில் தொடரை இழக்கவில்லை.

இம்முறை புத்துயிர் பெற்று பந்து வீசி வரும் டேல் ஸ்டெய்ன் மற்றும் அருமையாக வீசி வரும் ரபாதா மற்றும் பிலாண்டர் அல்லது மோர்கெல் ஆகியோரை பெர்த்தில் ஆஸ்திரேலியா எதிர்கொண்டாக வேண்டும். பெர்த்தில் தென் ஆப்பிரிக்கா 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 2-ல் வென்று ஒன்றில் டிரா செய்துள்ளது. எனவே இதுவும் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும் போது மனதில் இருக்கும். அதாவது ஆஸ்திரேலியா அணி பெர்த்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியதில்லை.

ஆனால் ஒன்றில் தென் ஆப்பிரிக்கா கவனமாக இருக்க வேண்டும் டேவிட் வார்னரின் பெர்த் சராசரி 95.85! அதாவது 4 டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்த சராசரியை வைத்துள்ளார். மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வார்னரின் டெஸ்ட் சராசரி 68 ரன்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா அணியிலும் இதற்கு சற்றும் சளைக்காமல் கேப்டன் ஃபா டு பிளெசிஸ் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகளில் 63.37 என்ற சராசரி வைத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் ஃபா டுபிளெசிஸின் டெஸ்ட் சராசரி 2 டெஸ்ட் போட்டிகளில் 146.50 என்பதும் கவனிக்கத்தக்கது.

ஆஸ்திரேலியா தனது விளையாடும் 11 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது:

டேவிட் வார்னர், ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், ஆடம் வோஜஸ், மிட்செல் மார்ஷ், பீட்டர் நெவில் (வி.கீ.), மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில், ஜோஷ் ஹேசில்வுட், நேதன் லயன்.

தென் ஆப்பிரிக்கா அணி வருமாறு: ஸ்டீபன் குக், டீன் எல்கர், ஹஷிம் ஆம்லா, டு பிளெசிஸ், தெம்பா பவுமா, டுமினி, குவிண்டன் டி காக், வெர்னன் பிலாண்டர், டேல் ஸ்டெய்ன், கேகிஸோ ரபாதா, கேசவ் மஹராஜ் அல்லது மோர்னி மோர்கெல்.


துளிகள்:

டேல் ஸ்டெய்ன் இன்னும் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஷான் போலாக்கைக் கடந்து தென் ஆப்பிரிக்காவுக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

ஆஸ்திரேலியா கடைசியாக பெர்த்தில் விளையாடிய 10 டெஸ்ட் போட்டிகளில் 5-ல் மட்டுமே வென்றுள்ளது.

தென் ஆப்பிரிக்கா பெர்த்தில் தோற்றதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x