Published : 13 Nov 2022 05:21 PM
Last Updated : 13 Nov 2022 05:21 PM

T20 WC | பாகிஸ்தானை தோற்கடித்து டி20 உலக கோப்பையை ஏந்தியது இங்கிலாந்து

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று டி20 உலக கோப்பையை வென்றுள்ளது.

டி20 உலககோப்பை போட்டியின் இன்றைய இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முஹம்மத் ரிஸ்வான், பாபர் அசாம் இணை தொடக்கம் கொடுத்தது. 4 ஓவர் வரை தாக்குப்பிடித்த இந்த இணையை, சாம் கரன் பிரித்து ரிஸ்வானை போல்டாக்கி வெளியேற்றினார்.

15 ரன்களில் அவர் நடையைக்கட்ட, முஹம்மத் ஹரிஸ் களத்துக்கு வந்து சேர்ந்தார். நிலையான ஆட்டத்தைக்கொடுத்து அணியின் ஸ்கோருக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்த்திருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை 32 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பிவைத்தார் அடில் ரஷித்.

இஃப்திகார் அஹமத்(0), முஹத்தம் ஹரிஸ் (8) பெரிய அளவில் ரன்களை சோபிக்காமல் விக்கெட்டாக, 15 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை சேர்ந்திருந்து பாகிஸ்தான் அணி. இறுதியில் ரன்கள் குறைவாக இருந்ததால் பேட்ஸ்மேன்களிடையே பதட்டம் நிலவியது. இதனால் அணிக்கு நம்பிக்கை கொடுத்த ஷான் மசூத்தும் 38 ரன்களில் கிளம்ப, ஷதாப் கானும் 20 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ரன்களை கூட்ட சிக்ஸ் அடிக்க முயன்ற வீரர்கள் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினர். பெரிய அளவில் நம்பிக்கை அளிக்காத பேட்ஸ்மேன்களால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் 137 ரன்களை சேர்த்தது.

இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கரன் 3 விக்கெட்டுகளையும், அடில் ரஷீத், கிரிஷ் ஜோடன் 2 விக்கெட்டுகளையும், பென்ஸ்டோக்ஸ் ஒருவிக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் இணை தொடக்கம் கொடுத்தது. ஹேல்ஸை முதல் ஓவரிலேயே ஷாஹின் அப்ரீடி போல்டாக்கி வெளியேற்றினார்.

3-ஓவர் வீசிய ஹாரீஸ் ராஃப், ஃபீல் சால்டை விக்கெட்டாக்க ஆட்டம் சூடுபிடித்தது. 4 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து 32 ரன்களை சேர்த்திருந்தது. இந்த டி20 உலக கோப்பை தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் இந்த போட்டியில் நிலைத்து ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில், பெரிய விக்கெட்டான அவரை ஹாரீஸ் ராஃப் அசால்ட்டாக தூக்கியது பாகிஸ்தான் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தது.

பவர் ப்ளே முடிவில் 49 ரன்களில் 3 விக்கெட்டை இழந்திருந்தது இங்கிலாந்து. ஒருபுறம் பென்ஸ்டோக்ஸ் நிலைத்து ஆட மறுபுறம் சதாப்கான் வீசிய பந்தில் ஹாரி ப்ரூக் விக்கெட்டாகி வெளியேறினார். தொடர்ந்து மொயின் அலி - பென்ஸ்டோக்ஸூடன் கைகோர்த்து இங்கிலாந்தின் ரன்களை உயர்த்தினர். மொயின் அலி 18-வது ஓவரில் வெளியேற, பென்ஸ்டோக்ஸ் 49 பந்துகளில் 52 ரன்களை சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அணியை வெற்றிபெறச்செய்தார். பாகிஸ்தான் அணி தரப்பில், ஹாரீஸ் ராஃப் 2 விக்கெட்டுகளையும், ஷாயின் அப்ரீடி, ஷதாப் கான், முஹம்மத் வசீம் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x