Published : 13 Nov 2022 05:21 AM
Last Updated : 13 Nov 2022 05:21 AM

டி20 உலகக் கோப்பையில் மகுடம் சூடுவது யார்?: இங்கிலாந்து - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

மெல்பர்ன்: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இன்று பிற்பகலில் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.

இரு அணிகளுமே தொடரை சுமாராக தொடங்கினாலும் அரை இறுதியில் ஆக்ரோஷமாக விளையாடி வெற்றியை வசப்படுத்தின. பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தையும் இங்கிலாந்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியாவையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இன்றைய மோதலானது 30 வருடங்களுக்குப் முன்னர் இதே மெல்பர்ன் மைதானத்தில் இரு அணிகளும் 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மோதிக் கொண்டவதை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது.

அப்போது இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி மகுடம் சூடியிருந்தது. அதேபோன்றதொரு வெற்றியை தற்போது டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் பெறுவதில் பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தீவிர முனைப்பு காட்டக்கூடும். இந்த தொடரில் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா? என்பதே கேள்விக்குறியாக இருந்தது. இதற்கு காரணம் தொடக்க ஆட்டங்களில் இந்தியா, ஜிம்பாப்வேயிடம் வீழ்ந்ததுதான்.

ஆனால் சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து, தென் ஆப்பிரிக்காவை அதிர்ச்சிகரமாக தோற்கடித்ததால் பாகிஸ்தானுக்கு அரை இறுதிக்குள் நுழைவதற்கான அதிர்ஷ்டம் கிட்டியது. எனினும் அதிர்ஷ்டத்தால் மட்டும் அந்த அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிடவில்லை. வலுவான நியூஸிலாந்து அணியை அரை இறுதி ஆட்டத்தில் எந்த இடத்திலும் ஆதிக்கம் செலுத்தவிடாமல் நெருக்கடி கொடுத்து வீழ்த்தியது 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் அணி.

பேட்டிங்கில் பாபர் அஸம், முகமது ரிஸ்வான் சரியான நேரத்தில் பார்முக்கு திரும்பி உள்ளனர். அரை இறுதியில் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் விளாசி அசத்தியிருந்தது. மொகமது ஹாரிஸ், இப்திகார் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ் ஆகியோர் நடுவரிசை பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். இதேபோன்று வேகப்பந்து வீச்சில் ஷாகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரஃவுப், முகமது நசீம், முகமது வாசிம் பலம் சேர்க்கின்றனர். சுழலில் ஷதப் கான், முகமது நவாஸ் ஆகியோரும் நெருக்கடி கொடுக்கக்கூடியவர்களே.

50 ஓவர் உலகக் கோப்பை நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, 2010-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது 2-வது முறையாக டி 20 உலகக் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது. இயன் மோர்கன் விட்டுச்சென்ற ஆக்ரோஷ அணியை ஜாஸ் பட்லர் அதே உயிர்ப்பிப்புடன் கட்டியெழுப்பி உள்ளார். சூப்பர் 12 சுற்றில் பேட்டிங்கில் தடுமாற்றம் கண்ட இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான அரை இறுதியில் பேட்டிங்கில் தாக்குதல் ஆட்டம் தொடுத்து 169 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக அடைந்தது.

இந்த ஆட்டத்தில் 170 ரன்கள் குவித்த அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாஸ் பட்லர் ஜோடி பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு சவால் அளிக்கக்கூடும். டேவிட் மலான், ஹாரி புரூக், மொயின் அலி, லியாம் லிவிஸ்டன், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் அதிரடியாக விளையாடக்கூடியவர்கள். டி 20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற இருதரப்பு டி 20 தொடரை இங்கிலாந்து அணி 4-3 என வென்றிருந்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை இங்கிலாந்து அணி நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் என்று கருதப்படுகிறது.

மட்டை வீச்சை போன்று இங்கிலாந்து அணியின் பந்து வீச்சும் வலுவாகவே உள்ளது. தொடக்க ஓவர்களில் மார்க் வுட் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடியவர். இதேபோன்று இறுதிக்கட்ட ஓவர்களில் சேம் கரண் சிறப்பாக செயல்படக்கூடியவர். நடுஓவர்களில் ஆதில் ரஷித் ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தக்கூடியவராக திகழ்கிறார்.

பாகிஸ்தான் அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. அதேவேளையில் இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிராக விளையாடாத வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட், பேட்ஸ்மேன் டேவிட் மலான் ஆகியோர் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிப் போட்டியானது பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சுக்கும், தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்கும் இடையிலான சவாலாக இருக்கக்கூடும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.13.30 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். 2-வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.6.65 கோடி கிடைக்கும்.இதற்கிடையே இறுதிப் போட்டி மழை காரணமாக பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. போட்டியின் இன்றைய நாளிலும், மாற்று நாளான திங்கள் கிழமையும் 95 சதவீதம் மழை பொழிவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியை குறைந்த பட்சம் 10 ஓவர்களாவது நடத்த வேண்டும். இதற்கு வாய்ப்பு கிடைக்காத பட்சத்தில் இரு அணிகளுக்கும் சாம்பியன் பட்டம் பகிர்ந்தளிக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x