துணைக்கண்ட சரிவுகளின் மனத்தழும்புகள் ஆஸி. வீரர்களிடமிருந்து அகலவில்லை: மைக்கேல் கிளார்க் கருத்து

துணைக்கண்ட சரிவுகளின் மனத்தழும்புகள் ஆஸி. வீரர்களிடமிருந்து அகலவில்லை: மைக்கேல் கிளார்க் கருத்து
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு வெளியே ஆடும் போது பேட்டிங்கில் ஏற்பட்ட திடீர் சரிவுகள், தொடர்ச்சியாக ஆட்டமிழப்பதன் மனத்தழும்புகள் இன்னமும் ஆஸ்திரேலிய வீரர்கள் மனதை விட்டு அகலவில்லை என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

பெர்த் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 158/0 என்ற நிலையிலிருந்து அடுத்த 10 விக்கெட்டுகளை 86 ரன்களுக்கு இழந்து திடீர் சரிவு ஏற்பட்டதற்கு இந்தக் காரணத்தை மைக்கேல் கிளார்க் முன்வைத்துள்ளார்.

அதாவது 2013-ம் ஆண்டு இந்திய தொடர் முதல் சமீபத்திய இலங்கை தொடர்களில் ஏற்பட்ட தொடர் சரிவு ஆஸ்திரேலிய வீரர்கள் மனதில் ஆறாமல் இருந்து வருகிறது, அதுதான் உள்நாட்டில் ஆடும்போது ஆஸி வீர்ர்கள் மனதில் ஊடுருவியுள்ளது என்கிறார் கிளார்க்.

அயல்நாடுகளில் அடிக்கடி கிரிக்கெட் தொடர்களில் ஆடி அங்கு சரிவும் தோல்வியும் ஏற்பட்டு அது ஆஸ்திரேலிய வீரர்களின் மனதில் ஆறாத் தழும்பாக மாறிவிட்டது என்று கிளார்க் ஆதங்கப்பட்டுள்ளார்.

சேனல் 9-ல் கிளார்க் கூறும்போது, "அயல்நாடுகளில் வெற்றியடைவது எவ்வளவு கடினம் என்பது அவர்கள் அறிந்துள்ளனர், இது தற்போது உள்நாட்டுத் தொடர்களிலும் தொடர் விக்கெட் சரிவுகளாக பிரதிபலிக்கிறது" என்றார்.

ஷேன் வார்ன் கூறும்போது, “வீரர்கள் அணியில் தங்கள் இடம்பற்றிய கவலையில் ஆடுவதால் ஆட்டத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. திடீரென வீரர்களுக்கு களத்தில் இறங்கியவுடன் அடுத்த போட்டியில் இருப்போமா மாட்டோமா என்ற கவலை ஏற்பட்டு விடுவதாகவே நான் கருதுகிறேன், இதுதான் அவர்கள் ஆட்டத்திலும் பிரதிபலிப்பதாகவே நான் கருதுகிறேன்.

இதுதான் இவர்களால் ஸ்பின் பந்து வீச்சை ஒழுங்காக ஆடமுடியவில்லை. ஒன்று தடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள் அல்லது பெரிய ஷாட்டை ஆடுகிறார்கள்.

பெரிய பதற்றம் இருக்கிறது, இதனால்தான் பெரிய அளவில் மளமள விக்கெட்டுகள் சரிவடைகின்றன.

தென் ஆப்பிரிக்க இடது கை சுழற்பந்து வீச்சாளர் மஹராஜ் ஒன்றும் கிரெனேடுகளை வீசவில்லை. அவரால் பேட்ஸ்மெனை பீட் கூட செய்ய முடியவில்லை” என்றார்.

கிளார்க் மேலும் கூறும்போது, “ஸ்பின்னர்களை பவுண்டரி அடித்துதான் விரட்ட முடியும் என்று கருதுகின்றனர். திறமையான வீரர்கள் ஒன்று, இரண்டு என்று ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வார்கள் பிறகு மோசமான பந்தை பவுண்டரி விரட்டுவார்கள்.

எனவே பவுண்டரிகளை மற, ஒன்றிரண்டுகளை நினை பவுண்டரிகள் தானாக வரும்” என்கிறார் கிளார்க்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in