

பெர்த் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடி 97 ரன்களில் வார்னர் ஆட்டமிழந்த தருணத்தில் வர்ணனையாளர் அறையில் சுவையான சம்பவம் ஒன்று நடந்தது.
முதல் நாள் ஆட்டத்தில் 62 பந்துகளில் 75 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இன்று களமிறங்கிய வார்னர் மேலும் வலுவாகச் சென்று 97 ரன்களில் ஆட்டமிழந்தார்.
வார்னரும், ஷான் மார்ஷும் தங்கள் போக்கிற்கு பவுண்டரிகளை அடித்து கொண்டிருந்த போது வர்ணனை அறையில் டேவிட் வார்னரின் பேட்டிங் குறித்து மார்க் நிகோலஸ், ஷேன் வார்ன் புகழாரத்தில் இறங்கினர்.
பெர்த்தில் டேவிட் வார்னரின் சராசரி 95 ரன்கள் என்பது பற்றியும் அவரது சதங்கள் பற்றியும் விதந்தோதி வந்தனர். அப்போது வார்னர் 97 ரன்களுக்கு வந்தார்.
அப்போது மார்க் நிகோலஸ், டேவிட் வார்னர் நிச்சயம் 100 அடித்து விடுவார், அவர் ஆடும் விதத்தைப் பார்த்தால் சதத்தையும் தாண்டிச் செல்வார் என்று கூறியதோடு நிற்காமல் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டிகளில் சதத்திற்கு அருகில் வந்து சதமெடுக்காமல் அவுட் ஆனதில்லை என்று ஒரு புள்ளி விவரத்தைக் கூறி முடித்தார்.
சொல்லி முடித்தவுடன் டேல் ஸ்டெய்ன் வீச 97 ரன்களில் இருந்த வார்னர், அவுட் ஸ்விங்கரை டிரைவ் ஆட முயன்று எட்ஜ் செய்து ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவர் ஆட்டமிழந்தவுடன் ’சதத்திற்கு அருகில் வந்து சதமெடுக்காமல் ஆட்டமிழந்ததில்லை வார்னர்’ என்று கூறிய மார்க் நிகோலஸிற்கு அடுத்து அமர்ந்திருந்த ஷேன் வார்ன் அதிர்ச்சியில் தன் இருக்கையை விட்டு எழுந்து விட்டார், மார்க் நிகோலஸை நோக்கி சில வார்த்தைகளை நகைச்சுவையாகக் கூறினார். நிகோலஸ் பின்னால் தட்டினார் ஷேன் வார்ன்.
சதத்திற்கு அருகில் வந்து அவுட் ஆனதில்லை என்று கூறியவுடன் வார்னர் 97 ரன்களில் அவுட் ஆனது ஒரு நகைச்சுவை தற்செயல் நிகழ்வானதால் வர்ணனையாளர்கள் ஒருவருக்கொருவர் சிரித்தபடியே ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். மேலும் இந்த அவுட் ஆஸ்திரேலிய சரிவுக்கு வித்திட்டது குறிப்பிடத்தக்கது.