Last Updated : 12 Nov, 2022 06:20 AM

2  

Published : 12 Nov 2022 06:20 AM
Last Updated : 12 Nov 2022 06:20 AM

T20 WC | சொன்னது ஒன்று… செய்தது ஒன்று…

பவர்பிளேவில் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் காட்டிய அணுகுமுறை, இரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களில் ஒருவரை பூஜ்ஜியமாக்கியது, தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட், ரிஸ்க் எடுப்பதில் காட்டிய வெறுப்பு ஆகியவற்றுக்கான பலனை டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சந்தித்துள்ளது.

உலகக் கோப்பையில் இந்திய அணியின் பயணம் அடிலெய்டு மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் வாயிலாக முடிவுக்கு வந்தது. டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் ஒருவருட திட்டமிடல் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

ராகுல் திராவிட்டும், கேப்டன் ரோஹித் சர்மாவும் டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கட்டமைக்கும் முன்னர், “அணியின் பழமைவாத பேட்டிங் அணுகுமுறையை மாற்றி முதல் ஓவரில் இருந்து தாக்குதல் ஆட்டம் தொடுக்க வேண்டும்” என்பதை நோக்கமாக கொண்டிருந்தனர். ஆனால் டி20 உலகக் கோப்பையில் இவர்கள் கூறியது அனைத்தும் காற்றில் பறந்தன.

கிரிக்கெட் பிரியர்களுக்கும், தீவிர ரசிகர்களுக்கும் மோசமான உணர்வு என்னவென்றால், இந்திய அணி எப்படி இவ்வளவு வாக்குறுதிகளை அளித்தது என்பதுதான்? தாக்குதல் ஆட்டம் தொடுக்க வேண்டிய பவர் பிளேவான முதல் 6 ஓவர்களில் கே.எல்.ராகுலும், ரோஹித் சர்மாவும் படுமந்தமாக பேட் செய்தனர்.

சூப்பர் 12 சுற்றில் கடைசி 10 ஓவர்களில் சூர்யகுமார் யாதவ், விராட் கோலி மட்டையை சுழற்றியதால் பெரிய அளவில் ரன்கள் சேர்க்க முடிந்தது. இலக்கை அடையும் சாத்தியமானது. ஆனால் அரை இறுதியில் இவர்கள் இருவரும் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்தத் தவறினர். பலம் குறைந்த அணிகளுக்கு எதிராக அரை சதம் அடித்த கே.எல்.ராகுல் வழக்கம் போல் ஏமாற்றம் அளித்தார். லீக் சுற்றில் 5 ஆட்டத்தில் பார்முக்கு திரும்பாத ரோஹித் சர்மா பழமைவாத பாணியில் பந்துகளுக்கு நிகராக ரன்கள் சேர்த்து பாதகத்தை உருவாக்கினார்.

இறுதிக்கட்டத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடாமல் இருந்திருந்தால் இந்திய அணி 150 ரன்களை கூட எட்டியிருக்க முடியாது. விளையாட்டில் தோல்வி என்பது நிகழக்கூடியதுதான். ஆனால் அந்த தோல்வி மன வலியையும், ஆறாத வடுவையும் ஏற்படுத்துவதுதான் வேதனையிலும் வேதனை. ஐசிசி தொடர்களில் கடந்த 9 ஆண்டுகளில் நாக்அவுட் சுற்றை கடக்க முடியாமல் இந்திய அணி வெளியேறி உள்ளது இது 6-வது முறையாகும்.

மலைபோல் நம்பியிருந்த ஜஸ்பிரீத் பும்ரா கடைசி நேரத்தில் காயம் காரணமாக வெளியேறியது இந்திய அணியின் ஸ்திரத்தன்மையை முதலில் சீர்குலைத்தது. இதற்கு முன்னதாகவே ரவீந்திர ஜடேஜா முழங்கால் காயம் காரணமாக விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் இடத்தை அணியில் யாராலும் நிரப்ப முடியவில்லை.

பும்ரா இல்லாததால் தொடக்க ஓவர் மற்றும் இறுதி ஓவர்களில் இந்திய அணி தள்ளாடியது. வங்கதேச அணிக்கு எதிராக கூட பெருமூச்சு விட்டுத்தான் வெற்றி பெற முடிந்தது. ஜடேஜாவின் ஆல்ரவுண்டர் திறனை எவராலும் நிரப்ப முடியாமல் போனது. வீரர்கள் காயம் அடைவது என்பது கட்டுப்பாட்டில் இருக்கக்கூடியது இல்லைதான். ஆனால் கட்டுப்படுத்தக் கூடியதைகூட செய்யாமல் விட்டுவிட்டது இந்திய அணி.

டி20 போட்டிகளில் நவீன ஆட்டத்துக்கு தகுந்தபடி விரைவு, ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும். அதிலும் முக்கியமாக பவர்பிளேவில் தாக்குதல் ஆட்டம் தொடுத்து எதிரணியின் பந்துவீச்சை சிதைவுக்கு உட்படுத்த வேண்டும். இதை இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செய்யத் தவறிவிட்டனர். விராட் கோலி ஒரு சில ஆட்டங்களில் வெற்றிக்கான பங்களிப்பை அதீதமாக வழங்கிய போதிலும் கூட, அவர் ஆட்டத்தின் பிற்பாதியிலேயே ரன்கள் வேட்டையாடி இருந்தார்.

பவர்பிளேவில் இந்திய அணியின் சராசரி ரன்விகிதம் 6.02 மட்டுமே. இந்த வகையில் 16 அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் முதல் 6 ஓவர்களில் 140 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினார்.

ஆனால் அவர், புல் ஷாட் விளையாடி பலமுறை ஆட்டமிழந்தது விவாதத்தை உருவாக்கியது. இது ஒருபுறம் இருக்க ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா ஆகியோரை தொடக்க வீரர்களாக களமிறக்கி சோதித்து பார்க்கப்பட்டது. இதில் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா அச்சமின்றி மட்டையை சுழற்றினர்.

ஆனால் கே.எல்.ராகுல் காயத்தில் இருந்து மீண்டு அணிக்குள் வந்ததும் அனைத்தும் மாறியது. அவருக்கு அதீத அளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் அவர், அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை காப்பாற்றவில்லை. உலகக் கோப்பையில் கே.எல்.ராகுல் முழுமையாக இரு ஓவர்களை மெய்டன் ஆக்கியுள்ளார். இது டி 20 வடிவத்தில் முற்றிலும் தவிர்க்கக்கூடியது.

அடுத்தது ரிஷப் பந்த்தை சரியாக பயன்படுத்தவில்லை. தினேஷ் கார்திக்கை முழுமையாக நம்பியது அணி நிர்வாகம். போட்டியை சிறப்பாக முடித்து வைக்கும் பணிக்காகவே அவர், தேர்வு செய்யப்பட்டிருந்தார். கடந்த 4 மாதங்களாகவே இதற்காக அவர், தயாராகி வந்தார்.

துணைக்கண்ட ஆடுகளங்களில் கடைசி 10 பந்துகளில் 25 முதல் 30 ரன்கள் தேவை என்றாலும் தினேஷ் கார்த்திக்கால் அதை எடுக்க முடிந்தது. ஆனால் பந்துகள் எகிறி வந்தஆஸ்திரேலிய ஆடுகளங்களில் தினேஷ் கார்த்திக்கால் நினைத்தபடி ரன்கள் சேர்க்கமுடியவில்லை. திடீரென அரை இறுதி ஆட்டத்துக்கு முன்னதாக தினேஷ் கார்த்திக்கை வெளியே வைத்துவிட்டு ரிஷப் பந்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பலன் கிடைக்கவில்லை.

3-வதாக சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் கைப்பற்றிய ரிஸ்ட் ஸ்பின்னர் யுவேந்திர சாஹலை, உலகக் கோப்பை தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட பயன்படுத்தவில்லை. அவருக்கு பதிலாக முன்னுரிமை கொடுக்கப்பட்ட அக்சர் படேல் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சீனியர் வீரர்களான அஸ்வின், புவனேஷ்வர் குமார் ஆகியோரும் ஏமாற்றம் அளித்தனர்.

இப்படி இந்திய அணியின் தோல்விக்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அடுத்த டி 20 உலகக் கோப்பை மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது. இதை நோக்கிய பயணத்துக்கு இந்திய அணியில் சில களையெடுப்புகள் இருக்கக்கூடும். ஆனால் அது உடனடியாக இருக்க வாய்ப்பில்லை. படிப்படியாக இருக்க சாத்தியம் உள்ளது. இதற்கான தொடக்கமாக அடுத்த வாரம் நடைபெற நியூஸிலாந்துக்கு எதிரான இருதரப்பு டி20 தொடர் இருக்கக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x