

அமான்: நடப்பு ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை லவ்லினா 75 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றுள்ளார். உஸ்பேகிஸ்தான் நாட்டு வீராங்கனை ரூஸ்மீட்டோவை 5:0 என்ற கணக்கில் வீழ்த்தி உள்ளார். ஆசிய அளவில் அவர் வெல்லும் முதல் பதக்கம் இது. இந்தத் தொடர் ஜோர்டான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்காக தயாராகி வரும் 75 கிலோ எடைப்பிரிவில் வென்றுள்ள முதல் பதக்கம் இது. இதற்கு முன்னர் அவர் 69 கிலோ பிரிவில் விளையாடி வந்தார். அது பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து கைவிடப்பட்ட காரணத்தால் இந்த எடைப் பிரிவில் விளையாடி வருகிறார் லவ்லினா.
இதற்கு முன்னர் டோக்கியோ ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெண்கல பதக்கத்தை அவர் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த ஜூலை வாக்கில் காமன்வெல்த் போட்டிகளின் போது பயிற்சியாளர்கள் வெளியேற்றப்பட்ட காரணத்தால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாக ட்விட்டரில் அவர் தெரிவித்திருந்தார்.
இதே தொடரில் 63 கிலோ பிரிவில் பிரவீன் ஹூடா மற்றும் 81 கிலோ பிரிவில் சவீட்டி ஆகியோரும் தங்கம் வென்றுள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 2017 வாக்கில் குத்துச்சண்டை வீராங்கனை பிங்கி ராணி ஒரே ஒரு தங்கப் பதக்கத்தை மட்டுமே இந்தியாவுக்காக வென்றிருந்தார்.