Published : 11 Nov 2022 03:11 PM
Last Updated : 11 Nov 2022 03:11 PM

இந்திய வீரர்களை வெளிநாட்டு டி20 லீக் தொடர்களுக்கு அனுமதிக்க வேண்டும்: கும்ப்ளே - பிளெமிங் உரையாடல்

பிளெமிங், கும்ப்ளே

இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே ஆடுவதால் பிற நாட்டு லீக் தொடர்களில் விளையாட அனுமதி இல்லாததால் அவர்கள் டி20 கிரிக்கெட்டின் பல பரிமாண அனுபவங்களில் இருந்தும் திறமை வளர்ப்பில் இருந்தும் தடுக்கப்படுகிறார்கள் என்று நடப்பு டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் படுதோல்வி அடைந்து இந்திய அணி வெளியேறியதை அடுத்து இந்த விவாதம் எழுந்துள்ளது.

உதாரணமாக, உலகம் முழுதும் ஐபிஎல் போல பல்வேறு லீக் தொடர்கள் நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக், மேற்கிந்திய தீவுகளில் கரீபியன் பிரீமியர் லீக், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை என டி20 லீக் தொடர்கள் நடைபெறுகின்றன. இவை அனைத்துமே தரமான கிரிக்கெட்டைத்தான் ஆடுகின்றன. இந்த லீகுகளில் மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை விளையாட அனுமதிக்கின்றன. ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முழுக்க முழுக்க வணிகக் காரணங்களுக்காக இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை. அப்படியே அவர்கள் ஆட விரும்பினாலும் இந்திய கிரிக்கெட்டிலிருந்து, ஐபிஎல் உட்பட ஓய்வு அறிவித்தால்தான் முடியும். ஓய்வு அறிவித்த பிறகு எந்த டி20 லீக் அணியின் உரிமையாளர்கள் அவர்களை ஒப்பந்தம் செய்வார்கள்?

இப்போது ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், டிம் டேவிட், பேர்ஸ்டோ உட்பட பல வீரர்களும் பல நாட்டு தனியார் லீகுகளில் விளையாடுகின்றனர். புதிதாக தென் ஆப்பிரிக்க டி20 லீக், யுஏஇ டி20 லீகில் ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள்தான் அணிகளை வாங்கியுள்ளனர். ஆனால் இந்திய வீரர்கள் விளையாட அனுமதி இல்லை. இத்தகைய குறுகிய நோக்கம் கொண்ட தடையினால்தான் தற்போது ஆடும் இந்திய வீரர்கள் பிற நாடுகளில் ஐசிசி தொடர்களில் ஆடும் போது சரிவர ஆட முடியவில்லை என்று ஒரு முக்கியமான, பரிசீலிக்கத்தக்க விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இணையதளத்தில் நடைபெற்ற விவாதக் களத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அனில் கும்ப்ளே, நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே பயிற்சியாளருமான ஸ்டீபன் பிளெமிங் மற்றும் டாம் மூடி ஆகியோர் கலந்து கொண்டு இது பற்றி பேசி இருந்தனர்.

ஸ்டீபன் பிளெமிங்: ஆம்! வெளிநாட்டு லீகுகளில் விளையாட பிசிசிஐ இந்திய வீரர்களை அனுமதிக்க வேண்டும் என்பதை பரிசீலித்துப் பார்க்கலாம். வர்ணனையாளர்களும் அதைத்தான் கூறினர். உதாரணமாக அடிலெய்டில் அலெக்ஸ் ஹேல்ஸின் அனுபவம், மற்றொரு இங்கிலாந்து வீரர் பில் சால்ட் போன்றோர் ஆடிய அனுபவம் போன்றவை இங்கிலாந்துக்கு கைகொடுத்துள்ளது. பல தனியார் உள்நாட்டு லீகுகளில் ஆடி பல வீரர்களும் அனுபவம் பெற்று வருகின்றனர்.

அடுத்த உலகக் கோப்பை மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. அப்போது மேற்கிந்திய தீவுகளின் மைதானத்தின் பரிமாணங்கள், காலநிலை, பிட்சின் தன்மை, எந்த முனையில் எப்படி வீசினால் நல்லது போன்ற விஷயங்களில் அனுபவம் பெற கரீபியன் பிரீமியர் லீகில் ஆடியிருந்தால் நல்லதுதானே. இந்த அனுபவம் நிச்சயம் ஒரு சாதகமான விஷயமே. இப்படி பல மைதானங்களில் ஆடினால்தான் தங்கள் திறமைப் பெட்டகத்தில் புதிய உபகரணங்களை அவர்கள் சேர்க்க முடியும்.

அனில் கும்ப்ளே: ஆம்! அந்த அனுபவம் நிச்சயம் கைகொடுக்கவே செய்யும். நிச்சயமாக எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் பலதரப்பட்ட அனுபவங்கள் கைகொடுக்கவே செய்யும். இது இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு எப்படி வித்திட்டது என்பதையும் பார்த்திருக்கிறோம். ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் ஆடுவதாலும் இந்திய வீரர்கள் பயனடைந்துள்ளனர். என்ன மாதிரியான கிரிக்கெட்டை ஆடப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கும் போது அதற்குரிய இளம் வீரர்கள் யார் என்று அடையாளம் கண்டு அவர்களுக்கு இத்தகைய வெளிநாட்டு லீக் அனுபவங்கள் கிடைத்தால் நல்லதுதானே. இது நிச்சயம் முக்கியமானதாக இருக்கும். இளம் வீரர்களுக்கு நிறைய ஆடும் வாய்ப்பு கிடைத்தால் அது நிச்சயம் உதவவே செய்யும்.

டாம் மூடி: ஆம்! இங்கிலீஷ் கவுண்டி கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் பலரும் ஆடி பயனடைவதைப் போலத்தான் பிற நாட்டு தனியார் டி20 லீகுகளிலும் ஆடுவது. ஜாகீர் கான், இஷாந்த் சர்மா, போன்றோர் இதன் மூலம் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளனர். மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுதல், அதிக போட்டிகளில் ஆடுவது என்பது பயனளிக்கும். கரீபியன் பிரீமியர் லீகை எடுத்துக் கொள்ளுங்கள். இது ஒரு நல்ல தொடர், இங்கு ஒரு 6 அல்லது 12 வீரர்களையாவது அனுப்பினால் 2 ஆல்ரவுண்டர்கள் நிச்சயம் உருவாவார்கள். எனவே கிரிக்கெட் வாரியத்தின் மைய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் வேண்டாம் என்றால் மற்ற வீரர்களை பிற டி20 லீகுகளில் ஆட அனுமதிக்கலாமே. பிற லீகுகளை ஒரு நல்ல பிளாட்பாரமாக பயன்படுத்திக் கொள்ளலாமே. இதை கிரிக்கெட் வாரியத்துடன் அமர்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும். ஐபிஎல் தவிர, இருதரப்பு தொடர்களைத் தவிர இந்திய வீரர்களுக்கு மற்ற டி20 லீகுகளில் ஆடிய அனுபவம் இல்லாமல் இருக்கிறது. வீரர்களை உருவாக்க பிற நாட்டு லீகுகள் நிச்சயம் பெரிய நடைமேடையாக இருக்கும்.

இவ்வாறு இவர்கள் கூறியுள்ளனர். பரிசீலிக்குமா பிசிசிஐ?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x