

அடிலெய்ட்: நடப்பு டி20 உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவியுள்ளது.
கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் தோல்வி ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூப்பர் 12 சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்திக்க விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
தோல்விக்கு பிறகு அதற்கான காரணங்களை பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், "உலகக்கோப்பை தொடர் முழுவதுமே எங்களுக்கு சிறப்பாக இருந்தது. ஆனால் இன்று எங்களுக்கான நாள் இல்லை. முக்கியமான போட்டிகளில் நிறைய ரன்கள்கள் சேர்த்தால்தான் உதவும். நடப்பு தொடரில்கூட 180+ ரன்கள் அடித்த அணிகளுள் இந்தியாவும் ஒன்று. இரண்டு அல்லது மூன்று முறை அதை நாங்கள் செய்திருக்கிறோம்.
ஆனால் இன்று 15 ஓவர்கள் முடிவில் 15 முதல் 20 ரன்கள் குறைவாக ரன்கள் சேர்த்தோம். எனினும், கடைசி ஐந்து ஓவர்களை நன்றாகவே விளையாடினோம்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை பார்க்கும் போது நாம் 15 முதல் 20 ரன்களை விட மிகவும் குறைவாக எடுத்து இருந்தோம் என்பதை உணர்ந்தோம். நிச்சயமாக இந்த பிட்சில் 180 முதல் 185 ரன்களை எட்டியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் போட்டியின் முடிவு மாறி இருக்கலாம் என நினைக்கிறேன்" என்றார்.