

அடிலெய்ட்: அடிலெய்டில் டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி கண்டுள்ளது இந்திய அணி.
இதனையடுத்து இந்திய அணி மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, அரையிறுதியில் ஆக்ரோஷமான விளையாட்டை வெளிப்படுத்தாத இந்திய பேட்டிங் யூனிட்டை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடுமையாக சாடியுள்ளார்.
சேவாக், "இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் இன்று அச்சமின்றி கிரிக்கெட் விளையாடவில்லை. அஞ்சாமல் களத்தில் விளையாடவில்லை என்றால் போட்டியை விட்டு வெளியேற வேண்டிதான் இருக்கும். எனவே குறைந்தபட்சம் எதிரணியை பயப்பட வைத்திருக்கலாம். அதுவும் இல்லை. அச்சமற்ற கிரிக்கெட் இப்போது காணாமல் போய்விட்டது. தோற்றாலும், குறைந்தபட்சம் போரடியாவது தோல்வி காணுங்கள்.
பேட்டிங் சாதகமான பிட்சில், இந்திய வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. மேலும் இங்கிலாந்தின் பந்துவீச்சு பிரிவுக்கு கொஞ்சம்கூட சவால் கொடுக்கவில்லை. இன்னும் அதிகமான ரன்கள் எடுத்திருந்தால், ஏதாவது நடந்திருக்கலாம்.
கடைசி இரண்டு டி20 உலகக் கோப்பைகளிலும் இந்திய அணியில் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. கடைசி டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்று வெளியேறினார்கள். அப்போது அணியில் சில மாற்றங்களைக் கொண்டுவருவது பற்றி அவர்கள் மிகவும் குரல் கொடுத்தனர். ஆனால் ஒன்று அல்லது இரண்டு மாற்றங்கள் மட்டுமே இருந்தன. பெரும்பாலும் கடைசி உலகக்கோப்பையில் விளையாடிய அதே முகங்கள் தான் இப்போதும், எதுவும் மாறவில்லை, அணுகுமுறையும் ஒரே மாதிரியாக இருந்தது. நெருக்கடியான போட்டிகளில் விராட் கோலி மட்டுமே ஸ்கோர் செய்தார்" என்று தெரிவித்தார்.