

சென்னை: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் அரையிறுதி போட்டியில் விளையாடுகின்றன. இந்தச் சூழலில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி, இதற்கு முன்னர் விளையாடிய இரண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் எப்படி செயல்பட்டுள்ளார் என்பதை பார்ப்போம்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடி 246 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டு வருகிறார் கோலி. அவரது ஆட்டம் அணிக்கு மிகவும் முக்கியம். அதேபோல அடிலெய்டு மைதானத்தில் அவர் விளையாடியுள்ள இரு டி20 போட்டிகளிலும் அவுட் ஆகவில்லை. முதல் போட்டியில் 90 ரன்களும், இரண்டாவது போட்டியில் 64 ரன்களும் அவர் எடுத்துள்ளார்.
மாடன் டே கிரிக்கெட்டின் ரன் மெஷின் என போற்றப்படும் விராட் கோலி, நாக்-அவுட் போட்டிகளில் அபாரமாக விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன்னர் இரண்டு முறை அரையிறுதியில் கோலி விளையாடி உள்ளார். அந்த இரண்டு போட்டிகளிலும் அவர் நாட்-அவுட் பேட்ஸ்மேனாக அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
எப்படியும் நாளைய போட்டியிலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக கோலி தனது ரன் வேட்டையை தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் அது இந்திய அணியின் வெற்றிக்கு உதவும். இந்தப் போட்டியில் வெல்லும் அணி வரும் ஞாயிறு அன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும்.