

அடிலெய்டு: பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சூப்பர் 12 குரூப்-2 பிரிவில் முதலிடம் பிடித்து அரையிறுதிக்கு முன்னர் உள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா விளையாடும் நான்காவது அரையிறுதி இது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயமடைந்துள்ளார். பயிற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் வழக்கமான த்ரோ டவுன்களை எடுத்துக் கொண்டிருந்தபோது வலது கையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் வலியால் துடிக்கும் ரோகித் சிறிது ஓய்வு எடுத்து காயம்பட்ட கையில் ஐஸ் கட்டியை தடவி மீண்டும் பயிற்சியை தொடர்கிறார்.
காயம் காரணமாக இங்கிலாந்து எதிரானப் போட்டியில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரோகித் விளையாட முடியவில்லை என்றால், அவரின் ஓப்பனர் இடத்தில் தீபக் ஹூடா அல்லது ரிஷப் பந்த் ஆகியோரில் ஒருவர் இறங்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், காயம் அவ்வளவு தீவிரமானது அல்ல என்றும் ரோகித்துக்கு CT ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே எதுவும் தேவையில்லை என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இரண்டாவது முறையாக பேட்டிங் பயிற்சி செய்யும் போது ரோகித் அதிக அசௌகரியத்தை உணரவில்லை. இன்னும் ஒருநாள் இருப்பதால் காயத்தின் தன்மையை பொறுத்து முடிவு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.