நீர்நிலைகளில் ரொனால்டோ, மெஸ்ஸி கட்-அவுட்: அதகளம் செய்யும் கேரள ரசிகர்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வரும் 20-ம் தேதி பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் கத்தார் நாட்டில் தொடங்க உள்ளது. உலக அளவில் பெருவாரியான ரசிகர்களை கொண்ட விளையாட்டு இது. அதனால் அடுத்த ஒரு மாத காலத்திற்கு ரசிகர்கள் விழா எடுத்து இதைக் கொண்டாடுவார்கள். அதிலும் இந்தியாவில் கேரள மாநில ரசிகர்கள் குறித்து சொல்லவே வேண்டாம். கால்பந்து ஆட்டத்தை உயிர்மூச்சாக சுவாசித்து வருபவர்கள் எனவும் அவர்களை சொல்லலாம்.

அதனைக் கடந்த காலங்களில் தங்களது செயல்களின் மூலம் செய்து காட்டியுள்ளனர். இப்போது உலகமே பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளது. கேரள ரசிகர்களும் இதில் அடங்குவர்.

உலகக் கோப்பை தொடரின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள புல்லாவூர் நீர்நிலையில் ரொனால்டோ, மெஸ்ஸி, நெய்மர் போன்ற பிரபல கால்பந்தாட்ட வீரர்களின் பல அடி உயர் கட்-அவுட்டை ரசிகர்கள் நிறுவியுள்ளனர். அதன் படங்கள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. சிலர் இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காமல் இருப்பது குறித்தும் சமூக வலைதள பதிவுகளில் கருத்து சொல்லி உள்ளனர்.

சார்பட்டா படத்தில் வருவதை போல மெஸ்ஸி வகையறா, ரொனால்டோ வகையறா, நெய்மர் வகையறா என தனித்தனி குழுக்களாக பிரிந்து தங்கள் மனம் கவர்ந்த ரசிகர்களை கொண்டாட்டத்துடன் ஆதரித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் கோழிக்கோடு சத்தமங்கலம் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் இந்த கட்-அவுட்டை அகற்றுமாறு பஞ்சாயத்து நடந்துள்ளது. அந்தப் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நீர்நிலை பாய்ச்சலை கட்-அவுட்கள் தடுக்கும் என சொல்லி இருந்தார். அதன் அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் அகற்ற சொல்லி இருந்தது. ஆனால், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ரஹீம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரும் கட்-அவுட்டை அகற்ற வேண்டியது இல்லை என தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in