Published : 08 Nov 2022 06:54 AM
Last Updated : 08 Nov 2022 06:54 AM
சிட்னி: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பைதொடரின் சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்த நிலையில் ஜிம்பாப்வேயிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்திருந்தது. இதனால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறக்கூடிய சூழ்நிலை உருவானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக தென் ஆப்பிரிக்க அணி தனது கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்திடம் தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான கதவு திறந்தது.
இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரை இறுதியில் கால்பதித்துள்ளது. சிட்னியில் நாளை நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியானது, நியூஸிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி வீரர்கள் மத்தியில் அந்த அணியின் பேட்டிங் ஆலோசகர் மேத்யூ ஹைடன் உரையாடும் வீடியோ ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் ஹைடன் கூறியிருப்பதாவது:
நாம் அரை இறுதிக்கு முன்னேறியது அதிசயம்தான். தற்போது நமக்கு ஆற்றல் கிடைத்துள்ளது. ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்பு மற்றும் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.
நமது பயணம் சீரானதாக இல்லை. நெதர்லாந்து அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தவில்லையென்றால் நாம் இங்கு இல்லை. ஆனால் நாம் அரை இறுதியில் இருக்கிறோம். இந்த இடம் வலுவானது. ஏனெனில் நம்மை அரை இறுதியில் பார்க்க யாரும் விரும்பவில்லை. இந்த ஆச்சர்யம் தான் நமக்கு சாதகம்.
மற்ற அணிகள் நம்மை தொடரில் இருந்து அகற்றிவிட்டதாக நினைத்தார்கள், ஆனால் தற்போது அவர்கள் நம்மை அகற்றப்போவது இல்லை. நாம் அபாயகரமான வீரர்கள், இதை புரிந்துகொண்டு நீங்களே பாராட்டிக்கொள்ள வேண்டும். நாம் தீவிர உள்நோக்கத்துடன் விளையாடும் போது, உண்மையாகவே அச்சுறுத்தல் கொடுக்கக்கூடிய அணியாக மாறுவோம்.
தற்போதைக்கு நம்மை எதிர்கொள்ள விரும்பும் எந்த ஒரு அணியும் இந்த உலகத்திலும், இந்தத் தொடரிலும் இல்லை.
அடுத்த போட்டிக்கு நகர்ந்து செல்லுங்கள், மனதை தெளிவாக வைத்துக்கொள்ளுங்கள். எந்த ஆடடத்தில் விளையாடினாலும் சுதந்திரமாக இருங்கள், புத்துணர்ச்சியுடன் இருங்கள். சிறந்த கிரிக்கெட்டை நேர்மறையாக விளையாடுங்கள். அச்சமில்லாமல் விளையாடுங்கள், ஏறக்குறைய மறக்க முடியாத அளவிலான ஆட்டத்தை விளையாடுங்கள். இவ்வாறு மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT