Published : 08 Nov 2022 06:10 AM
Last Updated : 08 Nov 2022 06:10 AM
சென்னை: திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி மனிஷா ராமதாஸ் உலக பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஜப்பானில் நடைபெற்ற இப்போட்டியில் ஒற்றையர் பிரிவில் மனிஷா ராமதாஸ், ஜப்பானின் மமிகோ டொயோடா என்பவரை 21-15, 21-15 என்ற நேர் செட்களில் தோற்கடித்து தங்கம் வென்றார். இதே தொடரில் இரட்டையர் பிரிவிலும், கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.
உலக பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி தங்க மங்கையாக வலம் வருவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மனிஷா தனது ஒரு வருட சர்வதேச வாழ்க்கையில் ஸ்பெயின், பிரேசில், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கனடா, ஜப்பான் என பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் 8 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் வெற்றிகளைக் குவித்து வருவதன் மூலம், மனிஷா ராமதாஸ் SU3 மற்றும்SU5 WS உலக தரவரிசையில் சாம்பியனாக முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். சாதனை படைத்துள்ள மனிஷாவுக்கு ஸ்ரீ நிகேதன் பள்ளி சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT