Published : 07 Nov 2022 07:37 AM
Last Updated : 07 Nov 2022 07:37 AM
மெல்பர்ன்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்று குரூப்-2 பிரிவில் முதலிடம் பிடித்தது. இதையடுத்து நவம்பர் 10-ம் தேதி அடிலெய்டில் நடைபெறும் 2-வது அரை இறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதிய சூப்பர் 12 சுற்றில் குரூப்-2 பிரிவின் கடைசி ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 15 ரன்களிலும், விராட் கோலி 26 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 3 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 18 ரன்களிலும் வீழ்ந்தனர். ஆனால் 4-வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஜிம்பாப்வே வீரர்களின் பந்துகளைச் சிதறடித்து ரன்களைக் குவித்தார். கடைசி கட்ட ஓவர்களில் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டு அவர் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 25 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அவர் 61 ரன்களை விளாசினார்.
ஜிம்பாப்வே தரப்பில் சீன் வில்லியம்ஸ் 2, முசராபானி, கரவா ஆகியோர் தலா ஒரு விக்கெட் சாய்த்தனர். பின்னர் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே 17.2 ஓவர்களில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்து 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்த அணியின் சிக்கந்தர் ராசா 34, ரியான் பர்ல் 35, கேப்டன் கிரெய்க் எர்வின் 13, சீன் வில்லியம்ஸ் 11 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் பெவிலியன் வந்தனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 ஓவர்கள் பந்துவீசி 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். மொகமது ஷமி, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அக்ஸர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர். ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது இந்திய அணி. இதையடுத்து நவம்பர் 10-ம் தேதி அடிலெய்டில் நடைபெறும் 2-வது அரை இறுதியில் இங்கிலாந்துடன், இந்திய அணி மோதவுள்ளது. நவம்பர் 9-ம் தேதி சிட்னியில் நடைபெறும் முதலாவது அரை இறுதியில் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்தைச் சந்திக்கிறது. ஓராண்டில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் 1,000 ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற பெருமையையும், முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் யாதவ் பெற்றார். 2021-ம் ஆண்டில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 1,326 ரன்கள் குவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT